ஓலா ஸ்கூட்டரைக் கழுதையில் கட்டிச் சென்ற பயனாளி!

Published On:

| By admin

மகாராஷ்டிராவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருவர் கழுதையில் கட்டி ஊர்வலமாக இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக திடீர் திடீரென எரியும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் அதை வாங்க பலர் பயப்படுகிறார்கள். மேலும், இது தொடர்பாக தொடர்ச்சியாகப் புகார்கள் வந்ததால், நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை ரீ-கால் செய்து திரும்பப் பெற்று, பிரச்சினைகள் இருக்கும்பட்சத்தில் இலவச சர்வீஸ் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்து தர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன்படி ஒகினாவா நிறுவனம் தனது 3,000 ஸ்கூட்டர்களை ரீ-கால் செய்தது. அதைத் தொடர்ந்து ஓலா நிறுவனமும் தனது 1,400-த்துக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை ரீ-கால் செய்ததாக அறிவித்தது. இந்த நிலையில் ஓலாவில் மீது மக்கள் கடும் அதிருப்தியாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி என்ற இடத்தைச் சேர்ந்த வியாபாரி சச்சின் என்பவர், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த ஸ்கூட்டர் வாங்கி வெறும் ஆறு நாட்கள் மட்டுமே சரியாக ஓடியது. அதன் பிறகு ஓடவே இல்லை.
இதுகுறித்து ஓலா நிறுவனத்தில் புகார் செய்தால், எந்தவித பதிலும் இல்லை. இதனால் கோபமடைந்த சச்சின், ஓலா ஸ்கூட்டரைக் கழுதையில் கட்டி அதில், `ஓலா ஸ்கூட்டரை யாரும் வாங்காதீர்கள்!’ என்று போர்டு வைத்து நகர் முழுவதும் கழுதையை ஊர்வலமாக ஓட்டிச்சென்றார்.
இதுகுறித்து பேசியுள்ள சச்சின், “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நான் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் எனக்கு கடந்த மார்ச் 25ஆம் தேதிதான் ஸ்கூட்டர் கிடைத்தது.
ஆனால், கைக்குக் கிடைத்த ஆறு நாட்கள் மட்டுமே வண்டி சரியாக ஓடியது. அதன் பிறகு நின்றுவிட்டது. வண்டியை கம்பெனிக்கு எடுத்துச் சென்றேன். ஓலா அதிகாரிகள் அதைச் சோதித்து பார்த்தார்கள். ஆனாலும் வண்டி ஓடவில்லை. அதன் பிறகு வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளும்படி கூறி என்னை அனுப்பிவிட்டனர். வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் பலமுறை தொடர்பு கொண்டு பேசியும் எந்தவித பயனும் இல்லை. எனவேதான் ஓலா ஸ்கூட்டரைக் கழுதையில் கட்டி இழுக்க முடிவு செய்தேன். பொதுமக்கள் யாரும் ஓலா ஸ்கூட்டரை வாங்காதீர்கள்!’’ என்றார்.
ஸ்கூட்டரைக் கழுதையில் கட்டி அவர் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

**-ராஜ்-**

ADVERTISEMENT
Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share