அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நேர் செட் கணக்கில் டேனில் மெத்வதேவை வீழ்த்தி தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதான அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 11) அதிகாலை நியூயார்க் நகரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் ஆகியோரும் மோதினர்.
100வது போட்டி!
இந்த இறுதிப்போட்டி ஜோஜோவிச்சுக்கு சர்வதேச அளவில் 100வது போட்டி என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் எளிதாக வென்றார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஜோகோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் மெத்வதேவ். எனினும் அந்த செட்டையும் 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார் ஜோகோவிச். பின்னர் 3வது செட்டிலும் தனது முழுமையான ஆதிக்கத்தை தொடர்ந்த ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வென்று அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது ஜோகோவிச்சுக்கு 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
https://twitter.com/usopen/status/1701023555620917587?s=20
மீண்டும் முதல் இடம்!
இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய வீரர் என்ற தனது சாதனையில் மேலும் பட்டத்தை அதிகரித்துள்ளார் ஜோகோவிச்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சற்று தடுமாறி வந்தார் ஜோகோவிச். இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் மற்றும் தற்போது யு.எஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
நேருக்கு ’நேர்’செட் பதிலடி!
கடந்த 2021ஆம் ஆண்டு இதே அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 6-4, 6-4, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டே ஆண்டுக்கு பின்னர் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அதே நேர்செட் கணக்கில் டெனில் மெத்வதேவை வீழ்த்தி பழிதீர்த்து உள்ளார் ஜோகோவிச்.
கிறிஸ்டோபர் ஜெமா
சிறையில் சந்திரபாபு… மாநிலம் முழுவதும் பந்த்… ஆந்திராவில் பதற்றம்!
வேர்டுபேட் முற்றிலுமாக நீக்கப்படும்: மைக்ரோசாஃப்ட் சொல்லும் காரணம்!
