பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று ஆகஸ்ட் 17-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன்,1957-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி திருப்பூரில் பிறந்தார். 1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். ஆனால் 2004, 2014, 2019 ஆகிய 3 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் பாஜக வலிமை பெற முதன்மை காரணியாக இருந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 2003-2006-ம் ஆண்டு காலத்தில் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்தார். மத்திய கயிறு வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
2023-2024-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்; 2024-ல் தெலுங்கானா பொறுப்பு ஆளுநராகவும் பின்னர் புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன். 2024-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி முதல், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வின் பின்னனி என்ன?
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என்பதை நாம் மின்னம்பலத்தில் ஏற்கனவே எழுதி இருந்தோம்.
அதில், “சிபிஆரைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். அதிமுக, பாஜகவின் வாக்கு வங்கியாக இருக்கிறது கவுண்டர் சமூகம். தற்போது சிபிஆர்- துணை ஜனாதிபதியாக்கப்பட்டால், சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு தமிழனை நாட்டின் உயரிய பதவிக்கு உட்கார வைத்தது அதிமுக- பாஜக கூட்டணி என்ற பிரசாரத்தை வீச்சாக முன்னெடுக்க உதவும்; கொங்கு பெல்ட்டில் ஓட்டுக்களை பல்க்காக அள்ளவும் உதவும்.. அதனால் சிபிஆருக்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என எழுதியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.