வைஃபை ஆன் செய்ததும் வடக்கே இருந்துதான் தொடங்கனும் என்ற பீடிகையுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். digital thinnai who is the next vice president
ஆமாம்.. ஜெகதீப் தன்கர் ராஜினாமாதானே
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தமது பதவியை திடீரென ஜூலை 21-ந் தேதி இரவு ராஜினாமா செய்வதாக அறிவித்ததுதான் தாமதம்.. டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்காக முகாமிட்டுள்ள அனைத்து கட்சி எம்பிக்களிடையே அந்த இரவிலும் பரபரப்பு அனலடித்து கொண்டிருந்தது.
இது பற்றி டெல்லி வட்டாரங்களில் பேசிய போது, ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து பாஜக எம்.பிக்கள் பலரும் இன்னமும் ஆச்சரியமாகத்தான் பேசுகின்றனர். ஜூலை 21-ந் தேதி மாலை 5 வரை, ராஜினாமாவுக்கான எந்த ஒரு சிக்னலும் ஜெகதீப் தன்கரிடம் இல்லை என்பதுதான் அனைத்து கட்சி எம்பிக்களின் கருத்து. 3 மணிநேரத்தில் என்னவோ நடந்திருக்கிறது என்பதும் எல்லோரது சந்தேகமும் என்கின்றனர்.
டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியோ, கட்டு கட்டாக பணத்துடன் சிக்கிய நீதிபதி வர்மா விவகாரத்தில் மத்திய அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர் எதிராக, மாநிலங்களவையில் நீதிபதி வர்மாவுக்கு எதிரான இம்பீச்மென்ட் எனப்படுகிற தகுதி நீக்க தீர்மானத்தை ஜெகதீப் தன்கர் ஏற்றுக் கொண்டார். இதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால்தான் பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் ஜெகதீப் தன்கரை இரவு 9 மணிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; அப்படி செய்யாவிட்டால் உங்களையே தகுதி நீக்கம் செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானம்தான் மாநிலங்களவையில் வரும் என மிரட்டினர்; இதனாலேயே ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துவிட்டார் என்றார்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து நாட்களும் உருண்டோடிவிட்டாலும் பாஜக தரப்பில் இருந்து மிகவும் கனத்த மவுனம் தொடரத்தான் செய்கிறது.

அடுத்த துணை ஜனாதிபதி யாராக இருக்கும்?
நம்ம ஊடகங்கள் எப்போதும் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவரையும் இதேபோல பதவிகளுக்கான ரேஸில் கோர்த்துவிடுவது வழக்கம். தமிழ்நாட்டிலும் அப்படித்தான் தமிழிசை தொடங்கி அண்ணாமலை வரை பலரையும் ஊடகங்கள் யூகங்களாக எழுதிக் கொண்டிருக்கின்றன
ஜெகதீப் தன்கர், ஆளுநராக இருந்து துணை ஜனாதிபதியாக்கப்பட்டவர்; அந்த வரிசையில்…
புரிகிறது..
மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனும் இந்த ரேஸில் இருக்கிறாராம்.. பரபரப்பான சூழ்நிலையில் சிபிஆர் டெல்லிக்கு விரைந்திருப்பது இந்த யூகங்களை வலுப்படுத்தி இருக்கிறதாம்.
இது தொடர்பாக தமிழக பாஜக வட்டாரங்களில் பேசிய போது, “சிபிஆரைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றான கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர். அதிமுக, பாஜகவின் வாக்கு வங்கியாக இருக்கிறது கவுண்டர் சமூகம். தற்போது சிபிஆர்- துணை ஜனாதிபதியாக்கப்பட்டால், சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு தமிழனை நாட்டின் உயரிய பதவிக்கு உட்கார வைத்தது அதிமுக- பாஜக கூட்டணி என்ற பிரசாரத்தை வீச்சாக முன்னெடுக்க உதவும்; கொங்கு பெல்ட்டில் ஓட்டுக்களை பல்க்காக அள்ளவும் உதவும்.. அதனால் சிபிஆருக்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என்கின்றனர். digital thinnai who is the next vice president
ஆனால் டெல்லி வட்டாரங்களோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையே கை காட்டுகின்றன. இதற்கு காரணமும் இருக்கிறதாம்.
டெல்லி சீனியர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடியின் கேபினட்டில் நெம்பர் 2 யார் என்பதில் எப்போதும் ராஜ்நாசிங் – அமித்ஷா இடையேயான பனிப்போர் இருந்து வருகிறது. தற்போது துணை ஜனாதிபதி பதவிக்கு ராஜ்நாத்சிங்கை அனுப்பி வைத்துவிட்டால் மோடி கேபினட்டில் அமித்ஷாவின் நம்பர் 2 என்பது கேள்விகளுக்கே அப்பாற்பட்டதாகிவிடும் என்கின்றனர்.
அதேநேரத்தில் ராஜ்நாத்சிங்கை துணை ஜனாதிபதியாக்குவதில் வேறு ஒரு உள்ளடி வேலையும் இருக்கலாம் என்கின்றனர்.
அதாவது, பிரதமர் மோடிக்கு செப்டம்பர் மாதம் 75 வயதாகிறது. ஏற்கனவே 75 வயதாகும் பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்வாரா? பதவி விலக சொல்லுமா ஆர்.எஸ்.எஸ். என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. அப்படியான நிலையில் ராஜ்நாத் சிங்கை கேபினட்டில் இருந்து வழியனுப்பினால் அது மோடியை பிரதமர் பதவியில் இருந்து வழியனுப்புவதற்கான ஒரு தொடக்கமாகவும் இருக்கும் என்கின்றனராம் பாஜக மூத்த தலைவர்கள்.

சரி சிஎம் ஸ்டாலின் எப்போ டிஸ்சார்ஜ் ஆகிறாராம்? digital thinnai who is the next vice president
சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு தலைசுற்றலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் முழு உடல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் ஓய்வில் இருந்தாலும் எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவது, மருத்துவமனையில் இருந்த நிலையிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலம் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ குறித்து ஆட்சியர்களுடனும் பொதுமக்களிடமும் கலந்துரையாடுவது என ஆக்டிவ்வாக இருப்பது திமுகவினரை ரொம்பவே உற்சாகப்படுத்தி இருக்கிறது. நாம் முன்னரே சொன்னது போல ஓரிரு நாட்களில் சிஎம் ஸ்டாலின் வீடு திரும்புகிறாராம்.

ஓவராக பட்டாசாக வெடிக்கிறாரே அண்ணாமலை?
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு 3 மாதங்களாகியும் அண்ணாமலைக்கு எந்த தேசிய பதவியும் கிடைக்கவில்லை.. இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் இப்படி செய்தியாளர்களிடம் ஆவேசத்தை காட்டுகிறார் அண்ணாமலை என்கின்றனர் பாஜகவில் ஒரு தரப்பு.
பாஜகவிலேயே இன்னொரு தரப்பு, அண்ணாமலை மீது 3 மாதங்களுக்கு முன்பு வரை பிரதமர் மோடி முதல் டெல்லி தலைவர்கள் அனைவரும் நல்ல மதிப்பு வைத்திருந்தனர்.. ஆனால் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் அதிகமாக சங்கடங்களை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசுவதை டெல்லி ரசிக்கவில்லையாம். இதனால் அவருக்கு கிடைக்க இருந்த கட்சியின் தேசிய பதவிகளும் கூட கைவிட்டு போகும் நிலைமைதானாம். எப்ப பதவி கிடைக்கும்? ஏன் இன்னமும் நமக்கு கிடைக்கலை? என்கிற பதற்றத்தைத்தான் செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படுத்திவிடுகிறார் அண்ணாமலை என்றும் சொல்கின்றனர்.
அதே நேரத்தில் அண்ணாமலை வட்டாரங்களோ, பொறுத்திருக்கிறோம்.. பொறுத்திருந்து பார்க்கிறோம்.. நடப்பது எல்லாம் நன்மைக்கு என நினைக்கிறோம் அண்ணா.. எதுவுமே நடக்காமல் போனால் ‘எதுவும் நடக்கலாம்தானே அண்ணா’ என பூடகமாக பேசுகிறார்களே என சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
