தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனுக்கள் இன்று (ஏப்ரல் 11) பிற்பகல் கமலாலயத்தில் பெறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. Nayinar Nagendran bjp new state president
அந்த அடிப்படையில் மின்னம்பலத்தில் ஏற்கனவே தெரிவித்த வகையில், தற்போதைய பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பிற்பகல் 2 45 மணிக்கு தனது விருப்ப மனுவை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினார். Nayinar Nagendran bjp new state president
நல்ல நேரம், ராசிக் கயிறுகள் என நம்பிக்கை அதிகம் கொண்டவர் நயினார் நாகேந்திரன். பங்குனி உத்திரத் திருநாளான இன்று மாலை 4.11 மணிவரை உத்திர நட்சத்திரம் இருக்கிறது. அதேநேரம் ராகு காலம் 10.30 மணி முதல் 12 மணி வரை. எனவே 12 மணிக்கு ராகு காலம் முடிந்த பின் கமலாலயத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் நயினார். உள்ளே நுழையும்போதே கமலாலயத்தின் படிகளைத் தொட்டு வணங்கினார். பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை எமகண்டம் வந்துவிடுகிறது. எனவே பங்குனி உத்திர நட்சத்திரத்தில், எமகண்டத்துக்கு முன்னரே 2.45 மணிக்கு தனது விருப்ப மனுவை தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்.
நேற்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே பாஜக மாநில தலைவராக கிருபாநிதி ஏழு வருட உறுப்பினராக இருந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த முன்னுதாரணத்தின் படி நயினார் நாகேந்திரனுக்கு இந்த விதிகளில் தளர்வளித்து அவர் மாநிலத் தலைவராகலாம் என பாஜக தேசிய தலைமை முடிவெடுத்தது. Nayinar Nagendran bjp new state president
அந்த அடிப்படையில் நாம்கேவாசி அதாவது பெயருக்கு நடக்கும் இந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுவை அளித்திருக்கிறார்.
பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பத்து பேர் நயினார் நாகேந்திரனின் விருப்ப மனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளனர்.
மனுவை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,
“இப்போதுதான் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறேன். நான்கு மணி வரை நேரம் இருக்கிறது. இன்னும் வேறு யாரேனும் மனு தாக்கல் செய்ய வந்தாலும் வரலாம். வாசல் போய் பாருங்கள்’ என்று கிண்டலாக பதில் அளித்தார். ஆனபோதும் நயினார் நாகேந்திரன் தான் அடுத்த பாஜக மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பாஜக மாநில தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அடுத்ததாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான விருப்ப மனுக்களை பொறுப்பாளர்கள் பெற ஆரம்பித்து விட்டனர். Nayinar Nagendran bjp new state president
எனவே நயினார் நாகேந்திரன் பாஜகவின் அடுத்த மாநில தலைவர் ஆவது உறுதியாகிவிட்டது. நாளை ஏப்ரல் 12 வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் தேர்வு முடிவை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.
இதற்காக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறார். இந்த விழாவுக்கான செலவுகளை முழுக்க முழுக்க பாஜக மாநிலத் தலைமையே மேற்கொண்டிருக்கிறது.