திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் தாயார் சரஸ்வதி அம்மையாரின் பிறந்த நாளை தந்தை டாக்டர் ராமதாஸுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் அன்புமணி.
பாமக நிறுவனர் -தலைவர் டாக்டர் ராமதாஸ், பாமக (செயல்) தலைவர் அன்புமணி இடையேயான மோதல் அதிதீவிரமடைந்துள்ளது. ராமதாஸ் அறிவித்த பொதுக்குழுவுக்கு போட்டியாக ஆகஸ்ட் 9-ந் தேதி பொதுக் குழுவை நடத்தி முடித்தார் அன்புமணி.
டாக்டர் ராமதாஸ் நடத்தும் சிறப்பு பொதுக்குழு நாளை ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற உள்ளது. தந்தை ராமதாஸ்- மகன் அன்புமணி இடையேயான மோதல் தற்போதைக்கு முடிவுக்கு வராத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, தமது குடும்பத்தினருடன் சென்றார். தைலாபுரம் தோட்டத்தில் தந்தை ராமதாஸுடன் இணைந்து தாயார் சரஸ்வதி அம்மாள் பிறந்த நாளை கொண்டாடினார் அன்புமணி. சரஸ்வதி அம்மாளின் ஒரு பக்கம் ராமதாஸ், மற்றொரு பக்கம் அன்புமணி நிற்க கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது ராமதாஸுடன் அன்புமணியின் குடும்பத்தினர் இணைந்து நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர்.
பாமகவில் அப்பா- மகன் இடையே மோதல் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தைலாபுரத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
