மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் அரசியல் பயணம் – ஒரு பார்வை!

Published On:

| By christopher

Late Nagaland Governor La Ganesan political journey

மூத்த வலதுசாரி அரசியல்வாதியும், நாகாலாந்து ஆளுருமான இல. கணேசன் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூரில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த இலக்குமி ராகவன் – அலமேலு தம்பதியருக்கு மகனாக 1945ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பிறந்தவர் இல. கணேசன்.

ADVERTISEMENT

சிறுவயதிலேயே தந்தையை இழந்து அண்ணனின் அரவணைப்போடு வளர்ந்தவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீது ஏற்பட்ட தீவிர ஈர்ப்புக் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் அதன் முழுநேரச் செயல்பாட்டாளராக தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பிரச்சாரகராக அவர் பணியாற்றியதை தொடர்ந்து பாஜகவில் இணைந்து அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரானார். இந்திரா காந்தி அரசாங்கத்தின்போது ஏற்பட்ட எமெர்ஜென்சி காலத்தில் போலீசாரிடமிருந்து தப்பித்து, சுமார் ஒரு வருடம் தலைமறைவாக வாழ்ந்தார். அதனையடுத்து பாஜக தேசிய செயலளார், தேசிய துணைத் தலைவர் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் என கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

ADVERTISEMENT

மேலும் தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 2009 மற்றும் 2014 ஆகிய இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக களம் கண்டு தோல்வியடைந்தார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவுக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து பின்னர் 2021ஆம் ஆண்டு மணிப்பூரின் 17வது ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பதவி வகித்தார். இதற்கிடையே ஜெக்தீப் தன்கர் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு 4 மாதங்கள் மேற்குவங்க மாநில ஆளுநராகவும் பணியாற்றினார்.

அதன்பின்னர் 2023 ஆண்டு பிப்ரவரியில் நாகாலாந்து மாநிலத்தின் 20வது ஆளுநராக நியமிக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் தான் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த 5ஆம் தேதி வீட்டில் மயங்கி விழுந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவரது தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உறைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் சிகிச்சைப் பலனின்றி நாட்டின் சுதந்திர தினமான இன்று மாலையில் காலமானார்.

அவரது மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share