ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி நாகேந்திரன் உடல் முன் அவரது இளைய மகன் அஜித் திருமணம் செய்து கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதில் முதல் குற்றவாளியாக வடசென்னையை சேர்ந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ரவுடி நாகேந்திரன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அக்டோபர் 9ம் தேதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவுபடி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று (அக்டோபர் 11) குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியானது.
ஆனால் சில காரணங்களால் இன்று (அக்டோபர் 12) காலை தான் அவரது உடல் மூத்த மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்டது.
வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் நாகேந்திரன் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நாகேந்திரனின் உடல் முன்பு அவரது இளைய மகன் அஜித் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார்.