சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை முதன்மை ஆணையர் மற்றும் துணை ஆணையர் இருவரும் அதிரடியாக டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த தமிழ்வளவன் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரக (DGTS) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை துணை ஆணையராக இருந்த ஹரேந்திர சிங் பால் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் செயல்திறன் மேலாண்மை இயக்குநகர அதிகாரியாகவும் (DGPM) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் அக்டோபர் 22ம் தேதிக்குள் டெல்லியில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லஞ்ச புகார்
முன்னதாக வின்ட்ராக் இன்க் என்ற லாஜிஸ்டிக்ஸ் சேவை அளிக்கும் கார்கோ நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை நிறுத்துவதாக கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்சப்புகாரை சுமத்தியது. வின்ட்ராக் இன்க் நிறுவனத்தின் லஞ்ச புகாரை சென்னை சுங்கத்துறை திட்டவட்டமாக மறுத்திருந்தது.
வின்ட்ராக் இன்க் நிறுவனத்தின் லஞ்ச புகார் குறித்து மத்திய நிதி அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை முதன்மை ஆணையர் மற்றும் துணை ஆணையர் இருவரும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
