மீண்டும் மீண்டும் நாகை-இலங்கை கப்பல் சேவை ஒத்திவைப்பு: காரணம் தெரியுமா?

Published On:

| By indhu

Nagai-Sri Lanka ferry service postponed again: Know the reason?

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மே 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச துறைமுகத்துக்கு கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதற்கான பயணக்கட்டணமாக ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து மொத்தம் ரூ.7,670 நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையுடன் ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டது.

இருந்தும் 2வது நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்தனர். இதன் காரணமாகவும், சில நாட்களில் பருவமழை தொடங்கியதன் காரணமாகவும் பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 20ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கப்பல் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில்  ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து வரவழைக்கப்பட்டு, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு தொடர்ந்தும் பல காரணங்களால் கப்பல் சேவை தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இன்று (மே 13) இந்த சேவை மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த கப்பலில் பயணிக்க ஆன்லைன் முன்பதிவு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த முறையும் மீண்டும் நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நாகை-இலங்கை பயணிகள் கப்பல் இயங்குவதற்கான அனுமதி பெறுவதில் காலதாமதம் காரணமாகவே திட்டமிட்ட தேதியில் கப்பலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதுத்தொடர்பாக கப்பல் நிர்வாகம் நேற்று (மே 12) வெளியிடப்பட்ட அறிக்கையில், “தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், கப்பலின் வருகை தாமதமானதாலும் திட்டமிட்டப்படி நாகை – இலங்கை பயணிகள் கப்பலை மே 13 முதல் 16ஆம் தேதி வரை இயக்க முடியவில்லை.

கப்பல் சேவை வரும் 17ஆம் தேதி முதல் இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதன்காரணமாக, மே 13 முதல் மே 16ஆம் தேதி வரை  முன்பதிவு செய்திருந்த பயணிகளின் பயணத்தை மே 17ஆம் தேதிக்கு மாற்றியுள்ளோம்.

பதிவு செய்த பயணிகள் 17ஆம் தேதி அல்லது அதற்கு பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணம் செய்யலாம். இதில் பயணிக்க விருப்பம் இல்லாதவர்கள் அவர்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இதுத்தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள customer.car@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பதால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும்.

ஆனால் மீண்டும், மீண்டும் கப்பல் சேவை ஒத்திவைக்கப்படுவது சுற்றுலாவாசிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

குறைந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

முதல்வரின் தனிச் செயலாளர் தினேஷ் குமாரின் தந்தை மறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share