தனது ஒன்றரை வயது மகனை வைரல் செய்தியாக்கி மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாமென வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் மனைவி ஆதங்கத்துடன் வேண்டுகோள் வைத்துள்ளார். my son is not your viral content : bumrah wife angry on angad video
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி மும்பையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தரப்பில் நட்சத்திர பவுலரான பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதற்கிடையே பும்ராவின் மகன் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. நேற்று வான்கடேவில் நடந்த போட்டியை பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவர்களது மகன் அங்கத் இருவரும் நேரில் கண்டுகளித்தனர். அப்போது பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தியதும் கேமரா சஞ்சனா மற்றும் அங்கத்தின் பக்கம் திரும்பியது.

பும்ரா விக்கெட் வீழ்த்தியதை அவரது மனைவி கைத்தட்டி கொண்டாட, ஒன்றரை வயது மகன் அங்கத் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தது இணையத்தில் வைரலானது. இதனை கண்ட பலரும் அங்கத் குறித்து கேலியாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தனது மகன் குறித்து வெளியாகி வரும் கருத்துகளுக்கு பதிலடியாக இன்ஸ்டாகிராமில் ஆதங்கத்தை கொட்டியுள்ளார் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன்.
அதில், “எங்கள் மகன் உங்கள் பொழுதுபோக்குக்கான தலைப்பு அல்ல. இணையம் ஒரு இழிவான, மோசமான இடம் என்பதால், அங்கத்தை சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைக்க ஜஸ்பிரித்தும் நானும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் கேமராக்கள் நிறைந்த கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு குழந்தையை அழைத்து வருவதன் தாக்கங்களை எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் ஜஸ்பிரித்தை ஆதரிக்கவே நானும் அங்கத்தும் அங்கு இருந்தோம், வேறு எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
என் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக, தேசிய செய்தியாக ஆக்கப்படுவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் வெறும் 3 வினாடி வீடியோவை வைத்து அங்கத் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.
அதிர்ச்சி, மன அழுத்தம் போன்ற வார்த்தைகளை ஒன்றரை வயதான ஒரு குழந்தையை நோக்கி வீசுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது.
எங்கள் மகனைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்கள் வாழ்க்கையைப் பற்றியும் எதுவும் தெரியாது. இன்றைய உலகில் கொஞ்சம் நேர்மையும் கொஞ்சம் கருணையும் நீண்ட தூரம் சென்றுவிட்டது” என ஆதங்கப்பட்டுள்ளார் சஞ்சனா.