முல்லைப் பெரியாறு: கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு!

Published On:

| By admin

ுல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையைக் கண்காணித்து பராமரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழகப் பிரதிநிதியாக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரளப் பிரதிநிதியாக அம்மாநில நீர்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜோஸ் ஆகியோர் உள்ளனர்.
இந்தச் சூழலில் கண்காணிப்புக் குழுவின் இரு மாநிலத் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கூடுதலாகச் சேர்க்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து தமிழகத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியம், கேரள சார்பில் அம்மாநில நீர்பாசனத் துறை நிர்வாகத் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்க்கீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மூவர் குழுவில் மேலும் இருவர் சேர்க்கப்பட்டு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக இந்தக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்தனர்.
தேக்கடி படகு குழாமில் இருந்து தமிழக, கேரளப் படகுகளில் இவர்கள் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றனர். இவர்கள் பிரதான அணைப் பகுதி, கேலரி பகுதியில் கசிவு நீர், பேபி அணை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் மதகுகளின் இயக்கத்தையும் சரி பார்த்தனர்.
அதன் பின்னர் தேக்கடியில் வழக்கமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. பல ஆண்டுகளாக தொடரும் தமிழகம் சார்ந்த பிரச்சினைகளை ஆலோசிக்க முடியவில்லை என்பதால் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் தன்னிச்சையான நீர் திறப்பு, அணைப் பகுதியில் கேரள அதிகாரிகளின் அத்துமீறிய ஆய்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தாமல் கண்காணிப்புக் குழுவினர் சென்றது தமிழக உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share