உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. உலகளவில் சுமார் 60,000 ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இதனால் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
60,000 ஊழியர்களுக்கு என்ன திட்டம்?
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அணிகளைச் சேர்ந்த தகுதியான ஊழியர்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இது கட்டாயப் பணிநீக்கம் அல்ல; நிறுவனத்தை விட்டு வெளியேற விரும்பும் ஊழியர்களுக்கு நிதி உதவியுடன் மாற்றுப் பாதையைத் தேர்வுசெய்யும் வாய்ப்பாகும்.
நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி (Chief People Officer) ஆமி கோல்மன், ஊழியர்களுக்கு மாற்றங்களைத் தேர்வுசெய்வதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை வழங்குவதும், வணிகத் தேவைகளுக்கு ஏற்ப அணிகளை மாற்றியமைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
யாரெல்லாம் விருப்ப ஓய்வு பெறலாம்? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உள்பணிநிலை வகைப்பாட்டில் (Job Grade) லெவல் 70 மற்றும் அதற்குக் கீழ் உள்ள நிலையில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது. சம்பந்தப்பட்ட அணிகளின் வணிகத் தேவைகள், வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் மற்றும் பணியாளர் தேவைகளின் அடிப்படையிலேயே தகுதி தீர்மானிக்கப்படும்.
இந்தியாவில் தகுதிபெறும் ஊழியர்கள் விருப்ப ஓய்வு முடிவை எடுக்க டிசம்பர் 1 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் என்ன?
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஊழியர்களுக்கு அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நிறைவடைந்த ஆண்டுக்கும் ஒரு மாத அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மருத்துவக் காப்பீடு மற்றும் அடுத்தகட்ட வேலைவாய்ப்பைத் திட்டமிடுவதற்கான தொழில் வழிகாட்டுதல் சேவைகளும் வழங்கப்படலாம்.
இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 23,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் எத்தனை பேர் விருப்ப ஓய்வுத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது.
மறுபுறம், 2025 முதல் 2029 வரை இந்தியாவின் கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும், இந்தியாவில் நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டுத் திட்டங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டியுள்ளது.
