ADVERTISEMENT

சீட் கிடைக்காதது தான் காரணமா? – மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி பின்னணி!

Published On:

| By Selvam

மதிமுகவின் தூண்களில் ஒருவரான ஈரோடு கணேசமூர்த்தி இன்று (மார்ச் 24) காலை அதிகளவில் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து வைகோ தலைமையில் 9 மாவட்ட செயலாளர்கள் வெளியேறினார்கள். அதில் ஒருவர் தான் தற்போது ஈரோடு தொகுதி எம்.பி-யாக இருக்கும் 76 வயதான கணேசமூர்த்தி. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 1994-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கினார்கள்.

ADVERTISEMENT

மதிமுகவின் பொருளாளராகவும், வைகோவின் வலதுகரமாகவும் இருந்து வந்த கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் இரண்டு சீட் கிடைத்தால், அதில் ஒரு தொகுதியில் தானும், இன்னொரு தொகுதியில்  துரை வைகோவும் போட்டியிடுவது என வைகோவிடம் ஆலோசனை செய்து வந்தார் கணேசமூர்த்தி.

இதற்கிடையில், தனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க தலைமைக்கு விருப்பம் இல்லை என்ற தகவல் தெரிந்ததும், மார்ச் முதல் வாரத்தில் தனது மகன் கபிலன், ஈரோடு மாவட்ட செயலாளர் குழந்தை வேல், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் செந்தில், ஆகிய மூவரையும்  வைகோவிடம் பேச அனுப்பியிருக்கிறார். அவர் துரை வைகோவை சந்திக்க சொல்லியிருக்கிறார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, கபிலன் உள்பட மூவரும்  துரை வைகோவை சந்தித்தனர். அப்போது, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், இருவரும் உடனிருந்திருக்கின்றனர். அவர்களிடம் துரை வைகோ, “இரண்டு சீட் கிடைத்தால் மற்றவர்களுக்கு தான் நாம் வாய்ப்பு தரவேண்டும். உங்கள் அப்பாவிற்கே தொடர்ந்து எத்தனை முறை தருவது?” என கேட்டாராம்.

இந்தநிலையில், இன்று (மார்ச் 24) காலை அமைச்சர் முத்துசாமி கணேசமூர்த்தியைத் தொடர்புகொண்டு ”அண்ணே… இன்னைக்கு செயல்வீரர்கள் கூட்டம். என்னென்ன செய்ய வேண்டும்? ஆலோசனை கொடுங்க… கூட்டத்திற்கு அவசியம் வாங்க” என்று இரண்டு முறை அழைத்துள்ளார்.

ஆனால், காலை 10.15 மணியளவில் தனது அறையில் இருந்த மாத்திரைகளை அதிகளவில் எடுத்து தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் வாமிட் எடுத்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆச்சு என்று விசாரித்த போது தான், தற்கொலை செய்துகொள்ள அதிகளவில் மாத்திரைகளை எடுத்துக்கொண்டார் என்பது தெரியவந்தது.

உடனடியாக அருகில் உள்ள சுதா மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் முத்துசாமி, மருத்துவமனைக்கு சென்று கூடவே இருந்து கவனித்து வந்துள்ளார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மதியம் 2.30 மணியளவில் அழைத்து சென்றனர்.

அவருடன் மகன் கபிலன், மருமகன், மதிமுக ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் கட்சியினர் சுமார் 20 பேர் சென்றுள்ளனர். மாலை 3.15 மணிக்கு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் மதிமுகவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக மதிமுகவிற்கு ஒரு சீட் தான் ஒதுக்கியுள்ளது. இரண்டு சீட் ஒதுக்கி அதில் ஒரு சீட் தரவில்லை என்றால், கணேசமூர்த்திக்கு வேதனையும் வருத்தமும் இருந்திருக்கலாம்.

தற்கொலை முயற்சிக்கு சீட் கிடைக்காதது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு பிரச்சனைகள் உள்ளதா? என்பதை உடல்நலன் தேறி வரும் கணேசமூர்த்தி சொன்னால் தான் தெரியவரும்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“செத்தாலும் எங்கள் சின்னம் தான்” : திமுக கூட்டத்தில் துரை வைகோ ஆவேசம்!

கெஜ்ரிவால் கைது: இந்தியா – ஜெர்மனி இடையே முற்றும் மோதல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share