”செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி வேட்பாளருமான துரை வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி தலைமையில் இன்று (மார்ச் 24) நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, ”மக்களவைத் தேர்தலில் அனைவரும் கூட்டணி வேட்பாளர் துரை வைகோவை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று கூறியவர், டென்சன் ஆக வேண்டாம் என்றும் துரை வைகோவிடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து தன்னை கூட்டத்தில் அறிமுகம் செய்து கொண்ட துரை வைகோ, சிறிது உணர்ச்சிவசப்பட்டு ஆவேசத்துடன் உரையாற்றினார்.
தந்தைக்காகவே போட்டியிட சம்மதித்தேன்!
அவர் பேசுகையில், “இங்குள்ள எல்லோருக்கும் தந்தை இருப்பார்கள். அந்த தந்தைக்கு தலைகுனிவு வந்துவிட கூடாது என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். எனது தந்தை வைகோ ஒரு சகாப்தம். அவருக்கு ஒரு தலைகுனிவு வரக்கூடாது என்பதற்காக தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
என்னை டென்சன் செய்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, மதிமுக நிர்வாகிகள் குழு கலந்துகொண்ட அனைவருமே ‘துரை வைகோ’ என்று தான் சொன்னார்கள்.
அப்போது நான், “எனக்கு வேண்டாம். வேறு யாரையாவது நிறுத்துங்கள்.. நான் அவர்களுக்காக தேர்தல் பணி செய்கிறேன்” என்று கூறினேன். ஆனால் எனக்கு விருப்பம் இல்லா விட்டாலும் கட்சிக்காக, எனது தந்தைக்காகவே மக்களவை தேர்தலில் போட்டியிட சம்மதித்தேன். கடந்த 30 வருடங்களாக கட்சிக்காக உழைச்சி உழைச்சி எங்கள் கட்சிக்காரர்கள் தேஞ்சிட்டாங்க. மக்களுக்காக உழைச்சி உழைச்சி எங்க அப்பா தளர்ந்து போயிட்டாரு” என்று கண்ணீர்விட்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்த நிர்வாகி ஒருவர், “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாமே?” என்று கேள்வி எழுப்பினார்.
எங்களுக்கு வேண்டாம்!
அதனால் ஆவேசமான துரை வைகோ, “சின்னமா… செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். நான் சுயமரியாதைக்காரன். அறிஞர் அண்ணா, கலைஞரின் கட்சி திமுக. நாங்கள் திமுகவையும், கலைஞரையும் உயிராய் நேசிக்கின்றோம். என் தந்தை உதய சூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டுள்ளார். உதய சூரியன் சின்னத்தை மதிக்கின்றோம். வேறு வேட்பாளரை நிறுத்துங்கள். அவர்களுக்காக மதிமுக கட்சிக்காரர்கள் நாங்கள் உழைக்கிறோம். சீட் கொடுக்காவிட்டாலும் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறோம். எங்களுக்கு வேண்டாம். இனிமேல் எங்களால் முடியாது.
நீதி ஜெயிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் திராவிட சக்திகளை அழித்து விட்டு மதவாதத்தை எப்படியாவது திணித்து விட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதற்கு வாய்ப்பளித்து விடக் கூடாது என்பதற்காக இங்கு எல்லோரும் ஒன்றிணைந்துள்ளோம். இந்த தேர்தலில் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம். எனவே தயவு செய்து எங்களை புண்படுத்தாதீர்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்.
இந்த மக்களவை தேர்தல் பாசிசத்திற்கும் திராவிடத்திற்கும் இடையேயான போட்டி, நீதிக்கும் அநீதிக்கும் இடையேயான போட்டி, இந்த தேர்தலில் நீதி ஜெயிக்க வேண்டும். தேர்தலில் திமுக அணி வென்று ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதே நமது குறிக்கோள்” என்று துரை வைகோ பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
KKR vs SRH: கெய்லின் சாதனையை அடித்து நொறுக்கிய ஆன்ட்ரே ரசல்
திமுக பிரச்சாரத்திற்கு செல்கிறேனா? : சூரி பதில்!
துரை வைகோ வெல்வர்