கடந்த காலத்தில் செய்த அதே தவறை மீண்டும் செய்தால், உங்கள் மீது மிச்சம் இருக்கும் நம்பிக்கையும் அடியோடு தகர்க்கப்படும் என மல்லை சத்யா இன்று (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
கடந்த மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மல்லை சத்யா, ‘ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தி கட்சியை விட்டு என்னை நீக்குங்கள்’ என வெளிப்படையாக பேசினார். அதன்பிறகு நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் சத்யாவை பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக எச்சரித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து ‘துரோகி’ என்ற வார்த்தையால் மெளனத்தை கலைத்த சத்யா, வைகோவுக்கு எதிராக ஊடகங்களில் பேசிவந்தார்.
இந்த நிலையில் வைகோவை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார் மல்லை சத்யா.
போராட்டம் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலைக்கு செல்வதற்கு முன்பு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், ”ஆண்டுக்கு 50 ஆயிரம் கி.மீ நெடும்பயணம் என்று எனது பயணங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. வைகோவின் மகன் துரைவைகோவின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னால், வைகோவுக்கு நெருக்காமனவர்கள் அவமதிக்கப்படுவதும், அலைக்கழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தொண்டர்களால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செல்வ பாண்டியன் உள்ளிட்டோர் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்ட சூழல் மதிமுகவில் உருவானது. இதுகுறித்து வைகோவிடம் பேச வேண்டும் என்றபோது, துரை சொன்னால் தான் பேச முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
எனவே தான் இந்த சூழலில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், என்னுடைய 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் களங்கப்படுத்தும் வகையில் துரோக பட்டத்தை சுமத்தியதை எதிர்த்து நாட்டு மக்களிடம் நீதி கேட்பதற்காகவும் தான் இன்று போராட்டத்தை உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம்.
துரை வைகோவிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை ஒன்று தான்.
வைகோவை நாங்கள் உயிராக நேசித்தோம். அவரும் எங்களை உயிராக நேசித்தார். கடைசி காலம் என்று தொடர்ந்து கூறி ஆயுளை குறைத்துக் கொண்டு வந்தீர்கள். ஆனால் இத்தனை ஆண்டுகாலம் நாங்கள் பாதுகாத்தோம். குறிப்பாக மூன்று முறை எங்கள் உயிரை பணயம் வைத்து காத்திருக்கிறோம். இனி காக்க வேண்டிய கடமை துரையிடம் தான் உள்ளது. அவரது உடல்நலனை நாங்கள் கவலையோடு பார்க்கிறோம். அவர் இன்னும் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்துடன் திராவிட கொள்கைகளை பார்க்கவேண்டும்.
நேற்றைய தினம், ”எக்காரணம் கொண்டு பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று வைகோ அறிவித்ததை வரவேற்கிறோம். அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏற்கெனவே 2001ஆம் ஆண்டு 22 தொகுதிகளில் கையெழுத்து போட்டுவிட்டு, வெளியே வந்து கூட்டணி இல்லை என்று ஓடியது போன்று,
2006ஆம் ஆண்டு திருச்சியில் மாலை நடைபெற இருந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டு, காலையில் நீங்கள் போயஸ் கார்டன் போனதையும் நாடு இன்றும் மறக்கவில்லை.
அதுபோன்று நிலைமையை நீங்கள் மீண்டும் மேற்கொண்டால், மிச்சம் இருக்கும் நம்பிக்கையும் அடியோடு தகர்க்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என மல்லை சத்யா தெரிவித்தார்.