மதுரையில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு பந்தலில் அக்கட்சியின் தொண்டர்கள் குடிக்க தண்ணீர் கேட்டு அலைமோதியிருக்கின்றனர். டோல்கேட்டுகளில் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் தவெக தொண்டர்களின் வாகனங்கள் மதுரை வந்து சேர்ந்தன.
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே தொண்டர்கள் குவிய தொடங்கினர். மதுரைக்கு வரும் வழியில் சில டோல்கேட்டுகளின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தவெகவினர் வாகனங்கள் சீறிப் பாய்ந்தன. இதனால் பெரும்பாலான டோல்கேட்டுகளில் தவெகவினர் கட்டணம் செலுத்தாமலேயே பயணிக்கின்றனர்.
தற்போது வரை சுமார் 50,000-க்கும் அதிகமான தொண்டர்கள் மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர். இவர்களில் பலர் காலையில் குடிநீருக்காக அலைந்தது பரிதாபமாக இருந்தது. மாநாட்டு பந்தலில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தும் நீரை திறந்துவிடவில்லை. தவெக தொண்டர்கள் கடும் எதிர்ப்பை காட்டிய பின்னரே, குடிநீர் விநியோகம் தொடங்கியது.
மதுரை மாநாட்டுக்கு வந்த தவெக தொண்டர்கள் கூறுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்டிஓ-க்கள் மூலம் நாங்கள் வரும் வாகனங்களுக்கு அரசு தரப்பில் நெருக்கடி தரப்படுகிறது. இந்த நெருக்கடியை மீறித்தான் வந்துள்ளோம் என்கின்றனர்.
