அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் வழக்கு… தமிழக அரசு மனு தள்ளுபடி!

Published On:

| By Selvam

அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 23) தள்ளுபடி செய்தது. Madras High Court refuses

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “டாஸ்மாக்கில் குற்றம் நடந்துள்ளதாக எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல விசாரணை நடத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி ஆஜராகி,” டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது வழக்கறிஞரை சந்திக்க கூட அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பெண் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை.

டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் அதிகாரிகளின் செல்போனில் இருந்த சில தகவல்களை பதிவிறக்கம் செய்தனர். இந்த வழக்கில் தங்களிடம் என்ன ஆவணங்கள் உள்ளன என்பதை அமலாக்கத்துறை விளக்க வேண்டும். சோதனையின் போது சில அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தூங்கவிடாமல் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டனர்.

அமலாக்க துறையினர் நீதியின் பாதுகாவலர்கள் இல்லை. அது ஒரு விசாரணை அமைப்புதான். அவர்கள் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு செயல்பட முடியாது.

சோதனையின் போது ரகசியம் என்று கூறி எந்த விபரங்களையும் தர மறுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்த பின்னர் அறிக்கையை வெளியிட்டதன் நோக்கம் என்ன?. சோதனையையே விசாரணை போல அமலாக்கத் துறை மேற்கொண்டது” என்று வாதங்களை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, “மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 42 வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம்.

சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் அமர்வு, “அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. சோதனையின் போது டாஸ்மாக் ஊழியர்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல.

அமலாக்கத்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பதை விசாரிக்க முடியாது. எங்கள் முன்பு உள்ள ஆவணங்களை அடிப்படையாக வைத்து மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதன்படி, டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடரலாம்” என்று தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். Madras High Court refuses

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share