நூறு கோடி வசூலுக்கு என்ன காரணம்?
‘நான் ஹீரோவா நடிச்ச 40 படங்கள்ல கிடைக்காத வரவேற்பை, இந்த படத்துல பெற்றிருக்கிறேன்’ என்று நடிகர் துல்கர் சல்மான் புளகாங்கிதம் அடையும் அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது, வேபேரர் பிலிம்ஸ் மூலமாக அவர் தயாரித்திருக்கும் ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’.
டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘சந்திரா’ எனும் மைய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். அவரோடு நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன், நிஷாந்த் சாகர், விஜயராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தில் டான்ஸ்மாஸ்டர் சாண்டி வில்லனாக வந்து போயிருக்கிறார். ஜேக்ஸ் பிஜோய் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
கடந்த வியாழக்கிழமையன்று மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இப்போது இந்தியிலும் வெளியாகவிருக்கிறது.
இதுவரை ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ உலகம் முழுவதும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது. அதுவே, அப்படியென்ன இப்படத்தில் இருக்கிறது என்று இதனைப் பார்க்காதவர்களைக் கேட்க வைத்திருக்கிறது.

’அதே’ பார்முலா!
வழக்கமாக ‘சூப்பர்ஹீரோ’ கதைகளில் என்ன நடக்கும்? தாங்க முடியாத அநீதிகளைத் தட்டிக் கேட்க முடியாமல் சாதாரண மக்கள் தவிக்கிறபோது, அவர்களைக் காக்கும்விதமாக அசகாய ஆற்றல் படைத்த ஒரு மாவீரன் அல்லது மாவீரர்கள் வருவார்கள்; அந்த எதிர்மறை சக்தியை அழிப்பார்கள் அல்லது விரட்டியடிப்பார்கள். ‘அதே’ பார்முலா தான் இந்த ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ படத்திலும் இருக்கிறது. என்ன, அதனைச் செய்கிற பெண் சக்தியாக உள்ளது ‘சந்திரா’ பாத்திரம்.
பெங்களூருவில் நண்பன் வேணுவோடு ஒரு பிளாட்டில் தங்கியிருக்கிறார் சன்னி (நஸ்லென்). அவரது இன்னொரு நண்பன் நைஜில். தோழிகள், தோழர்கள் உடன் மது விருந்து நடத்துவது இவர்களது பொழுதுபோக்கு. சன்னிக்கு வேலை எதுவும் இல்லை. அவர் ஒரு வேலையில் இருந்து துரத்தப்பட்டு சில மாதங்களாகிறது. எதிர் பிளாட்டில் புதிதாகக் குடிவரும் பெண்ணைப் பார்த்ததுமே சன்னிக்கு காதல் வருகிறது. அப்பெண்ணின் பெயர் சந்திரா (கல்யாணி பிரியதர்ஷன்).
அவர் யார், எங்கிருந்து வந்தார் என்று எந்த விவரமும் சன்னிக்குத் தெரியாது. இன்னொரு புறம், தனது மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டிய கட்டாயத்தை எண்ணிப் பொருமிக் கொண்டிருக்கிறார் அந்த வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்ப கௌடா (சாண்டி).
உடலுறுப்பு திருட்டுக்காக ஆள் கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு அவர்கள் இருவருமே உடந்தையாக இருக்கின்றனர். ஒருநாள் அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு அடியாளைச் சந்திரா தாக்க, அவருக்கும் நாச்சியப்பனுக்கும் முட்டிக் கொள்கிறது. இந்த நிலையில், சந்திராவை அந்த கும்பல் கடத்திச் செல்கிறது. அதனைக் காணும் சன்னி, அவரைக் காப்பாற்றும் நோக்கில் பின்னே செல்கிறார். ஆனால், அங்கு அவர் காணும் காட்சிகள் வேறுவிதமாக இருக்கின்றன.
வானத்திற்கும் பூமிக்கும் தாவுகிற ஆற்றலோடு இதர பலவற்றையும் கொண்டவராக இருக்கிறார் சந்திரா. அவரது செயல்களைக் கண்டதுமே சன்னிக்கு மயக்கம் வந்துவிடுகிறது. சந்திரா யார்? அவர் எதற்காக அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்? நாச்சியப்பனை ஆட்டுவிக்கிற கடத்தல் கும்பல் யாருடையது? இந்தக் கதையில் நாச்சியப்பனின் பங்கு என்ன? இது போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்கிறது ‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ படத்தின் மீதி.
பொதுவாக, இப்படிப்பட்ட கதைகளில் அறிவியல் புனைவுகளைக் கலப்பதே வழக்கமாக இருக்கும். இதிலும் அப்படியொரு அம்சம் உள்ளது. ஆனால், அதனை ‘நாட்டுப்புறவியல்’ கதைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு சொல்வதன் வழியே வித்தியாசப்படுகிறது இப்படம். அந்த கதை சொல்லலே இப்படத்தின் பலம். அதுவே பெரியவர்கள் முதல் இன்றைய ஜென்ஸீ ரசிகர்கள் வரை தியேட்டரில் கூடக் காரணமாக உள்ளது. அதனாலேயே, இப்படம் நூறு கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவிருக்கிறது.

பார்த்திராத ‘காட்சியாக்கம்’!
லோகா சேஃப்டர் 1: சந்திரா படத்தின் அடிநாதமாக இருப்பது அதன் காட்சியமைப்பு. அவற்றில் பெரும்பாலும் ‘க்ளிஷே’க்களை பார்க்க முடியாது. ஏற்கனவே சில திரைப்படங்களில் பார்த்த விஷயங்கள் கூட இப்படத்தில் லேசாக மாற்றப்பட்டிருப்பதை உணர முடியும். அது மட்டுமல்லாமல், அந்த உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிற விதமும் இதுவரை நாம் பார்த்திராத வகையில் இருக்கிறது.’சின் சிட்டி’ ஹாலிவுட் படம் போன்று ‘கிராபிக் நாவல்’ வகையறா காட்சியாக்கத்தைக் கொண்டிராமல், ஓரளவுக்கு நம் ரசிகர்களின் பார்வைப்புலன்களுக்கு இதமானதாக உள்ளது இப்படம்.
விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அனைத்தும் நம்மைத் திரையில் இருந்து தொலைவில் நிற்க வைக்காமல், அதனோடு ஒன்ற வைத்திருக்கின்றன. ’ஒரு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு’ என்று சொல்கிற வகையில், மேற்கத்திய ‘பேண்டஸி அட்வெஞ்சர்’ படங்களில் இருக்கிற காட்சியாக்கம் போன்று உள்ளது ’லோகா சேஃப்டர் 1: சந்திரா’.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ, சண்டைப்பயிற்சி வடிவமைப்பாளர் யான்னிக் பென் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு அதன் பின்னே இருக்கிறது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்குத் தந்திருக்கும் பின்னணி இசை, ஒரு மேற்கத்திய படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், அதற்கு நேரெதிராகக் காட்சியமைப்பில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடிகளின் வாழ்வுப் போராட்டம் சொல்லப்பட்டிருக்கிறது.
’திரையில் ஓடும் பிம்பங்களோடு ஒட்டவா வேண்டாமா’ என்று யோசிக்கிற நம் மனது ‘பச்’செக்கென்று படத்தோடு ஒன்றுவது அந்த இடத்தில்தான். அதன்பிறகு, கிளைமேக்ஸ் முடியும் வரை நாம் இருக்கையோடு பிணைந்திருக்க வேண்டியிருக்கிறது.இயக்குனர் டொமினிக் அருண் இப்படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதையாக்கத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வழக்கமாக, இது போன்ற ‘சூப்பர்மேன்’ அல்லது ‘சூப்பர்வுமன்’ கதைகளில் பிரதான பாத்திரங்களை ஏற்றவர்கள் ‘அடி.. அடி..’ என்று எதிரே வருபவர்களை அடித்து நொறுக்குவதே வழக்கம். இதில் ஆக்ஷன் காட்சிகளுக்கு நிகராக ‘செண்டிமெண்ட்’ காட்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
வெறுமனே பரபரவென்று நகர்கிற காட்சிகளை மட்டும் புகுத்தாமல், ‘இந்த கதையின் அடுத்த நகர்வு என்ன’ என்று எதிர்நோக்குகிற வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விடுபட்டிருக்கிற தகவல்கள், இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கான விதைகளாக உள்ளன. அந்த வகையில் சாந்தி பாலச்சந்திரன், சௌபின் ஷாகிர் உட்பட சில மலையாள நட்சத்திரங்கள் இதிலொரு காட்சியில் வந்து போயிருக்கின்றனர். அவர்களும் ‘அசகாய’ ஆற்றலைப் பெற்றவர்கள் என்று உணர்த்தியிருப்பதே அக்காட்சியின் சிறப்பு.
நடிப்பைப் பொறுத்தவரை, பல்வேறு திசைகளில் இருக்கிற சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாக உள்ளது கல்யாணி பிரியதர்ஷன் இருப்பு. ஏற்கனவே ஆண்டுக்கு ஓரிரு படங்களில் நடிக்கும் அவர், இனிமேல் அந்த படங்களின் உள்ளடக்கம் இதே உயரத்திற்கு இருக்கும்படி நோக்க வேண்டியிருக்கும்.
’கேர்ள்ஸ் க்ரஷ்’ என்று சொல்லும்படியாக அழகாக வந்து போயிருக்கிறார் நஸ்லென். ஒரு சாதாரண நவயுக இளைஞனைத் திரையில் முன்வைப்பதே அவரது நடிப்பின் சிறப்பு.

ஆங்காங்கே எழுகிற சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது சந்து சலீம்குமார், அருண் குரியன் கூட்டணி. இன்னும் நிஷாந்த் சாகர், விஜயராகவன், நித்யஸ்ரீ, சரத் சபா எனப் பலர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர். டொவினோ தாமஸ் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டி நம்மை ‘கிச்சுகிச்சு’ மூட்டுகிறார். இவர்களோடு அன்னா பென், சன்னி வெய்ன் என்று நீள்கிறது ‘கேமியோ லிஸ்ட்’.
இவர்கள் அனைவரையும் கடந்து நம் மனதில் நிற்கிறது வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சாண்டியின் நடிப்பு. அவருக்கான காட்சிகள் குறைவு என்றபோதும், பின்பாதியில் அப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இனி தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் அவர் முகம் காட்டுவார் என்பது திண்ணம்.
‘லோகா சேஃப்டர் 1: சந்திரா’ படத்தில் எத்தனையோ நடிப்புக் கலைஞர்கள் வந்து போகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ரசிகர்களுக்குத் திருப்தி தருகிற வகையில் படத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். அதற்கேற்ற காட்சியமைப்பு இதிலுள்ளது. அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிற விதம் ‘ப்ரெஷ்’ஷாக உணர வைக்கிறது. அதற்கேற்ற உழைப்பை உள்ளடக்கத்தில் கொட்டியிருக்கின்றனர் தொழில்நுட்பக் கலைஞர்கள்.
அனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரு ‘நாவல்’ படித்த சுவாரஸ்யத்தைத் திரையில் காட்டுகிறது டொமினிக் அருணின் கதை சொல்லல். அதில் சில குறைகளையும் நாம் கண்டுபிடிக்க முடியும். ஆனால், தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அதற்கான வாய்ப்பைத் தராததே இப்படத்தின் சிறப்பு. அதற்காக இன்னும் சில கோடி ரூபாய் வசூலை இப்படம் நிச்சயம் அள்ளும்..!