கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். lk sudhish says aiadmk assures
இந்தநிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை நாளிதழுக்கு எல்.கே.சுதீஷ் இன்று (மே 4) அளித்துள்ள பேட்டியில், “தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தார்கள். இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.
அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்ளக்குறிச்சியிலும், 2014-ல் சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார். 2019-ல் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்கிறதா என்ற கேள்விக்கு, “2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அதிமுகவோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம்.
இப்போது அதிமுகவும் பாஜகவும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அக்கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை எங்களது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.
ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை பிரேமலதா முறைப்படி அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “ராஜ்யசபா சீட் குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எதுவும் வாக்குறுதி அளிக்கப்படவில்லை” என்று மறுத்துவிட்டார்.
உடனடியாக கேப்டன் விஜயகாந்த் என்ற சமூக தள பக்கத்தில், “சத்தியமே வெல்லும் நாளை நமதே” என பதிவு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.