வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் ஆத்தூரில் அளித்த பேட்டியின் வீடியோ லிங்க் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“இன்று மார்ச் 4ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் பலர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உற்சாகமாக செய்தியாளர்களிடம் பேசினார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ‘அப்படி என்று யார் சொன்னது? எங்களது தேர்தல் உடன் படிக்கையை பார்த்தீர்களா? யாராவது சொன்னார்கள் என்று கேட்காதீர்கள்’ என்று காட்டமாக பதில் கூறினார் எடப்பாடி.

ஓரிரு வாரங்களுக்கு முன்புதான் அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும். இது ஏற்கனவே எடுத்த முடிவுதான்… யார் எம்பி என்பதை விரைவில் அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் எடப்பாடியின் இந்த கருத்து தேமுதிகவை அப்செட் ஆக்கியது. உடனடியாக கேப்டன் விஜயகாந்த் என்ற சமூக தள பக்கத்தில், சத்தியமே வெல்லும் நாளை நமதே என பதிவு செய்யப்பட்டது. மேலும் தேமுதிக நிர்வாகிகள் சிலர் அதிமுகவை கண்டித்து பதிவுகள் போட ஆரம்பித்தனர்.
திடீரென சில நிமிடங்களில் விஜயகாந்த் சமூக தள பக்கத்தில் இருந்த அந்த பதிவு நீக்கப்பட்டது. தேமுதிக நிர்வாகிகள் யாரும் அதிமுகவை விமர்சிக்க கூடாது என தலைமைக் கழகத்திலிருந்து வாட்ஸ் அப் மூலமாக அவசரமான உத்தரவும் பறந்தது.
இடையில் என்ன நடந்தது? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோபம் ஏன் தணிந்தது?
எடப்பாடி பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வலதுகரமான ஆத்தூர் இளங்கோவன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தம்பி சதீஷிடம் ஃபோன் பேசி இருக்கிறார்.
எடப்பாடி அளித்த பேட்டியின் பின்னணி பற்றி விளக்கி, ’நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. தேமுதிகவுக்கு என்ன செய்யணுமோ நிச்சயம் செய்வோம்’ என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த பின்னணியில்தான் அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என பிரேமலதாவிடம் இருந்து அவசர உத்தரவு பறந்தது.
ராஜ்யசபா தேர்தலில் எடப்பாடி வியூகம் என்ன என அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது…
வருகிற ஜூலை மாதத்தோடு தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிகிறது. இதில் அதிமுகவுக்கு இரண்டு எம்பிக்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஒரு ராஜ்யசபா எம்பி தேர்ந்தெடுக்கப்பட தமிழ்நாட்டில் 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால், அதிமுகவுக்கு இப்போது சட்டமன்றத்தில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2021 இல் வெற்றி பெற்ற 66 பேர்களில் இப்போது ஓபிஎஸ் உள்ளிட்ட நான்கு பேர் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் போக மீதம் 62 பேர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

எடப்பாடி-ஜி.கே.மணி சந்திப்பு!
இரண்டு ராஜ்யசபா எம்.பி. களை தேர்ந்தெடுக்க 68 எம்எல்ஏக்கள் வேண்டும். இந்த சூழ்நிலையில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பாமக கௌரவ தலைவர் ஜி. கே. மணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய சேலம் இல்லத்துக்கே சென்று சந்தித்தார்.
’2021 தேர்தலில் அதிமுக- பாமக கூட்டணியில் ஆறு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். அதிமுகவிடம் தற்போது 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாமகவின் 6 பேரைச் சேர்த்தால், மொத்தம் 68 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலம் இரண்டு ராஜ்யசபா எம்பிக்களை நாம் தாராளமாக தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அந்த வகையில் நீங்கள் எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆவதற்கு உதவ வேண்டும்’ என எடப்பாடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஜி. கே. மணி
ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கும் பாமகவுக்கு ராஜ்ய சபா கொடுத்தால் அதிமுக சார்பிலும் ஒருவரை எம்பி ஆக்க முடியும். அது மட்டுமல்ல 2021 இல் இருந்த கூட்டணியையும் மீண்டும் கொண்டுவர முடியும் என்றெல்லாம் மணி, எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார்.
விந்தியாவுக்கு ராஜ்ய சபா வாய்ப்பு!

இதற்கிடையில் இது குறித்து அதிமுகவுக்குள்ளும் விவாதித்திருக்கிறார் எடப்பாடி.
இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர்களை நாம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், இருவரையும் கூட்டணி கட்சிக்கு கொடுத்து விடக்கூடாது. நிச்சயமாக அதிமுகவை சேர்ந்த ஒருவரை எம்பி ஆக்க வேண்டும். இல்லையென்றால் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு… அதிமுக சார்பில் நடிகையும் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவருமான விந்தியாவை ராஜ்ய சபாவுக்கு அனுப்பலாம் என ஆலோசித்து வருகிறார் எடப்பாடி.
மீதம் இருக்கும் ஒரு இடத்தை பாமகவுக்கு அளித்து கட்சியை வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வருவது என்றும் திட்டமிட்டுள்ளார்.
இந்த பின்னணியில்தான் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் அளிப்பதாக எப்போது சொன்னோம் என இன்று கேட்டிருக்கிறார் எடப்பாடி. இது பற்றி எல்லாம் தேமுதிக சுதீஷிடம் எடுத்துச் சொல்லப்பட்டு சமாதானம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆக ராஜ்யசபா தேர்தல் மூலம் சட்டமன்றத் தேர்தலுக்கான அணியை அமைப்பதிலும் ஒரு ஸ்டெப் முன்னேற்றம் காட்டலாம் என்ற அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எடப்பாடி” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.