தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் Leaders hail historic Supreme Court verdict
ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, பல முக்கிய சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார்.
அதை நாம் மீண்டும் அவருக்கு அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டமன்றம் நிறைவேற்றிய, சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என அரசியலமைப்பு வரையறுத்த போதிலும், இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி வந்தார். மேலும் அவருக்கு அதிகாரம் இருப்பதாக சொல்லிவந்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்று, ஆளுநர் சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைத்திருந்தது, சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. Leaders hail historic Supreme Court verdict
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்ரை நிலைநாட்டிட தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை வரலாற்று ரீதியாக மீண்டும் உறுதிப்படுத்துவதாகும். ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான கேரளாவின் நிலைப்பாடு மற்றும் நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் ஒரு உறுதியான நிலைப்பாடாகும்.L
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை
தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறிவந்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன்மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அரசையும் பாராட்டுகிறோம். மேலும் அரசியல் சாசனத்திற்கும், தமிழக நலன்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், குடியரசு தலைவர் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்றே சொன்னார் அண்ணா, ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
உச்சநீதிமன்ற தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மாநில மக்களின் நலனுக்காக தான் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து ஆளுநர் தனது பதவி விலக வேண்டும், அல்லது குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன் Leaders hail historic Supreme Court verdict
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக் கழக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுகணக்கில் அவற்றைக் கிடப்பில் போட்டுவைத்ததுடன், தனது சட்டப்பூர்வமான கடமையையும் ஆற்றாமல், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது.
அவரது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பின்புலம் அவரை முரட்டுப் பிடிவாதக்காரராக வளர்த்தெடுள்ளது. அதனால் அவருக்கு இந்த மூக்கறுப்பு இன்று நடந்தேறியுள்ளது.