தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் காரணமற்ற கால தாமதம் செய்வதாக தமிழ்நாடு அரசால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 8) அரசியல் சாசன முக்கியத்துவம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. Supreme Court judgement 5 important points
நீதிபதிகள் மகாதேவன், பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
1. ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை சட்ட விரோதமானது. அவர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த பத்து மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக உச்ச நீதிமன்றம் அறிவிக்கிறது.
2. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் ஆளுநருக்கு வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரம் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ எதுவும் கிடையாது.
3. சட்டமன்றத்தால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது பிரிவு 200-இன் கீழ் ஆளுநர்கள் முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்பதே இதுவரையில் ஆளுநர்கள் தரப்பின் வாதமாக இருந்தது. இந்தத் தீர்ப்பில் ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு வகுக்கப்படும். மாநில சட்டமன்றத்தால் இயற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர் முடிவு செய்தால் அதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தால், அதனை அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
4 . நாங்கள் ஆளுநரின் பதவியை குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. ஆளுநர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தீர்க்கப்பட்ட மரபுகளுக்கு உரிய மரியாதையுடன் செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.
அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் விருப்பத்தைத் தடுக்கவோ, உடைக்கவோ தடைகளை உருவாக்கவோ அல்லது மாநில சட்டமன்றத்தை நெரிக்கவோ கூடாது என்பதில் ஆளுநர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
5. நீதிபதி பர்திவாலா தனது தீர்ப்பில், ” அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாக ஆகிவிடும்” என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை முடித்தார்.