ஒன்றல்ல இரண்டல்ல 27 முறை லேசர் ஒளி குறுக்கீடு : டிஜிசிஏ!

Published On:

| By Kavi

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் 27 முறை இதுபோன்று நடந்திருப்பதாக டிஜிசிஏ கூறியுள்ளது. Laser light interference on planes 27 times

2025 மே 25ஆம் தேதி, துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானபோது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது.

இதனால் விமானியும், பயணிகளும் தடுமாற்றத்துக்கு உள்ளாகினர். தொடர்ந்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

நேற்று (ஜூன் 10) அதிகாலை 1 மணியளவில் புனேவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்குவதற்கு கிட்டத்தட்ட மூன்று கடல் மைல் தொலைவில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் (AAI) கூறுகின்றனர். உடனடியாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இதுபோன்று இந்த ஆண்டு ஜூன் வரையில் 27 விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆண்டும் இந்த எண்ணிக்கை 65ஆக இருந்தது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கூறியுள்ளது.

”விமான தரையிறங்கும் முக்கிய கட்டங்களில் லேசர் கற்றை குறுக்கீடு என்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். விமானிக்கு குருட்டுத்தன்மை மற்றும் கவனச்சிதறல் ஏற்பட்டு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்” என்றும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க சென்னை காவல்துறை, டிஜிசிஏ, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறை அதிகாரிகள் கொண்ட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு, அதில் லேசர் விளக்குகளைத் தடை செய்ய முடியுமா? என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

லேசர் ஒளி குறுக்கீடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், லேசர் விளக்குகளின் ஆபத்துகள் மற்றும் விமான நிலையத்தை நெருங்கும் விமானங்களுக்கு அது ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி வருவதாகவும் சென்னை விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. Laser light interference on planes 27 times

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share