தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி (Ajay Rastogi) தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செநதில்குமார், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிராக தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜூனா தமது மனுவில் கோரியிருந்தார்.
இதேபோல கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி ஏமூர் பன்னீர்செல்வம், சக்திவேல் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேகே மகேஸ்வரி, என்வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது பல்வேறு கேள்விகளையும் உச்சநீதிமன்றம் சரமாரியாக எழுப்பி இருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்
- கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணை நடத்தும்
- சிபிஐ விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும்; இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சாராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவர்
- சிபிஐ மாதந்தோறும் விசாரணை அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும்
- அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிமுறைகளை வகுக்க கோரும் வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து நடத்தலாம்
- ரோடு ஷோ வழக்கை குற்ற வழக்காக தனி நீதிபதி விசாரித்தது எப்படி? என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.