தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுகுணா (வயது 65) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, ஆண்கள் 12 பேர்; பெண்கள் 18 பேர் என மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தது. இந்த தொகையை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. நேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதேபோல, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிவாரண நிதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வழங்குகிறார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.