வைஷ்ணவி என்ற இளம் பெண்ணை கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட கார்த்திக் என்பரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். ஆனால் அந்தக் கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பின்னர் வைஷ்ணவி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக செயல்பட்டு வரும் வைஷ்ணவி, தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கரூர் பெருந்துயர சம்பவம் குறித்தும், தவெக-வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் வகையிலும் ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்புளுசன்சர் கார்த்திக். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களை வைத்துள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் , திமுகவை சேர்த்த வைஷ்ணவியின் புகைப்படத்தை பகிர்ந்து, சில பெண்களைப் பார்த்தால் கண்டந்துண்டமாக வெட்ட வேண்டும் என்று அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அதில் பேசி இருந்தார்.
கார்த்திக் வெளியிட்ட அந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து கார்த்திக் நீக்கி விட்டார். ஏன் அப்படி பேசினேன் என்றும் விளக்கம் அளித்து வைஷ்ணவி புகைப்படத்துடன் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
கார்த்திக் கொலை மிரட்டல் விடுத்து பேசியிருந்த வீடியோ காட்சிகளுடன் திமுகவைச் சேர்ந்த வைஷ்ணவி, சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வைஷ்ணவி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் இன்புளுயன்சர் கார்த்திக் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் பாண்டிச்சேரியில் இருந்த கார்த்திக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்ஸ்டா பிரபலம் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அவரது பாலோயர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
