தமிழகம்- கேரளா- கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கக் கூடிய எர்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் ரயில் ( Ernakulam–Bengaluru Vande Bharat) உள்ளிட்ட 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவம்பர் 8) தொடங்கி வைக்கிறார்.
வாரணாசியில் நாளை 8-ந்தேதி காலை 8.15 மணிக்கு இந்த 4 புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் மோடி, கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள்,
1) எர்ணாகுளம் – பெங்களூரு
2) பனாரஸ் – கஜூராஹு
3) லக்னோ – சஹரான்பூர்
4) ஃபிரோஸ்பூர் – டெல்லி
ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில்: தென்னிந்தியாவின் எர்ணாகுளம் – பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை பயண நேரத்தை 2 மணி நேரம் வரை குறைக்கிறது. இந்த ரயில் சேவை இவ்விரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வர்த்தக மையங்களை இணைப்பதுடன் தொழில்முறை சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே சுற்றுலா மற்றும் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன் பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பிற்கு வழி வகுக்கிறது.

எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில்,
- திருச்சூர் (கேரளா)
- பாலக்காடு (கேரளா)
- கோவை (தமிழ்நாடு)
- திருப்பூர் (தமிழ்நாடு)
- ஈரோடு (தமிழ்நாடு)
- சேலம் (தமிழ்நாடு)
- கிருஷ்ணராஜபுரம் (கர்நாடகா)
- கேஎஸ்ஆர் பெங்களூரு (கர்நாடகா)
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
பனாரஸ் – கஜூராஹு இடையிலான வந்தே பாரத் ரயில்:
தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவைகளுடன் ஒப்பிடுகையில், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பயண நேரத்தைக் குறைக்க இந்த வந்தே பாரத் ரயில் உதவுகிறது.
நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வாரணாசி, பிரயாக்ராஜ், சித்திரகூட் மற்றும் கஜூராஹு உள்ளிட்ட மதம் மற்றும் கலாச்சாரத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ளது.
லக்னோ – சஹரான்பூர் வந்தே பாரத் ரயில்: 1 மணி நேர பயண நேரத்தை சேமிக்க உதவுகிறது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், லக்னோ, சீதாபூர், ஷாஜஹான்பூர், பரேலி, மொராதாபாத், பிஜ்னோர் மற்றும் சஹரான்பூர் நகரங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயன் அளிப்பதாக உள்ளது. ரூர்க்கி வழியாக ஹரித்துவார் புனித நகருக்கு ரயில் பயணத்தை மேற்கொள்ளவும் உதவும்.
பிரோஸ்பூர் – டெல்லி வந்தே பாரத் ரயில் சேவை: பயண தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் நிறைவு செய்கிறது. இந்த சேவை பஞ்சாபில் உள்ள முக்கிய நகரங்களான பிரோஸ்பூர், பத்திண்டா, பாட்டியாலா போன்ற நகரங்களை தலைநகர் டெல்லியுடன் இணைப்பதன் மூலம் ரயில் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த உதவுகிறது.
