1998ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்ற தனது பேச்சு சர்ச்சையான நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று (ஜூலை 30) விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக – பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், ”1998அம் ஆண்டு பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. அப்போது நாங்கள் தவறு செய்துவிட்டோம். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல, இடையில் வந்த சுப்பிரமணிய சுவாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜகவை வீழ்த்தி வரலாற்றுப் பிழை செய்துவிட்டோம். அன்று பாஜக – திமுக கூட்டணி அமைந்ததன் காரணமாக, திமுக இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. பாஜக ஆட்சியை அதிமுக கவிழ்த்ததால் திமுக 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

தமிழ்நாட்டில் திமுக வளர்வதற்கு பாஜகவே காரணம். மத்திய ஆட்சியில் கூட்டணி வகித்ததால் திமுகவிற்கு அதிகாரம் கொடுத்தது பாஜக தான். அதே பாஜகவை இன்று திமுக தீண்டத்தகாத கட்சியாகப் பார்க்கிறது. ஜெயலலிதா மட்டும் அந்த வரலாற்றுப் பிழையைச் செய்யாமல் இருந்திருந்தால், தற்போது திமுக என்ற கட்சியே இருந்திருக்காது” என்று பேசினார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து கடம்பூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், கடம்பூர் ராஜூ கருத்து அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள தனது பேச்சுக்குறித்து கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ஆம் தேதி கோவையில் தொடங்கி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டம் மேற்கொண்டு வருகிறார். இதனால் மக்களிடையே அதிமுகவிற்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் வருவார் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் பாஜகவின் நிலையை எடுத்துச் சொன்னேன். 1998ல் முதன்முறையாக வாய்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைவதற்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அப்போது தமிழ்நாட்டின் பிரச்சனைகளை மையப்படுத்தி நாங்கள் பேசுகின்ற போது, சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வெளியே வந்துவிட்டோம். திமுகவுடன் கூட்டணி வைக்கும்போது பாஜக நல்லக் கட்சி. ஆனால் அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக தீண்டத்தகாத கட்சியா? என்று தான் பேசினேன் தவிர, எனது கருத்து முழுவதுமாக திரித்து கூறப்பட்டுள்ளது” என்று கடம்பூர் ராஜு விளக்கமளித்தார்.