தமிழ் சினிமா தாலி சென்டிமென்ட்டை, சென்று வென்று கொன்று மென்று தின்று தண்ணீர்க் குடித்த காலத்தில் அதே தாலி செண்டிமெண்டை வைத்து அன்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியாக அந்த ஏழு நாட்கள் படத்தை எழுதி இயக்கியவர் கே.பாக்யராஜ்.
யாரைக் காதலித்து இருந்தாலும் இன்னொருவனை திருமணம் செய்து கழுத்தில் தாலி வாங்கிய பிறகு, கணவனுக்குத்தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்ன இந்தப் படத்தை எழுதி இயக்கிய அதே பாக்யராஜ்தான், கணவன் சரி இல்லை என்றால் தாலி ஜஸ்ட் கயிறுதான். தூக்கிப் போடு என்று சொன்ன புதியவார்ப்புகள் படத்துக்கும் எழுதியவர்.
ஒரே வித்தியாசம் தாலியைத் தூக்கிப் போட சொல்லும் படத்தில் கணவன் கெட்டவன். தாலிதான் முக்கியம் என்று சொல்லும் படத்தில் கணவன் நல்லவன். அம்புட்டுதான் கணக்கு.
ஆனால் இப்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து வந்திருக்கும் டியூட் படத்தில் அப்படி நல்லவன் கெட்டவன் என்ற வரைமுறை இல்லாமல் தாலியை என்னவோ மஞ்சக் கலர் சணல் கயிறு மாதிரி டீல் செய்திருப்பதைப் பார்த்த பாக்யராஜால் சும்மா இருக்க முடியவில்லை.
”இப்படி எல்லாம் அவசியமே இல்லாமல் தாலியை மலினப்படுத்துகிற மாதிரி காட்சிகள் வைப்பது சமூகத்தில் வேண்டத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற ரீதியில் கருத்துச் சொல்ல, ஒரு பக்கம் அவரை ஆதரித்து பலர் பேசினார்கள்.
எங்கிருந்து வந்தார்களோ எதிர் கும்பல்! ‘உங்களுக்கு என்ன தெரியும். நீங்க பத்தாம் பசலி. உங்களுக்கு பெண்ணுரிமை பற்றி என்ன தெரியும்?’ என்றெல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பாக இப்போதே பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள்.
இதில் பூகம்ப அதிர்ச்சி என்னவென்றால், அப்படி பொங்கி எழும் ஆட்கள் பெரும்பாலும் ஆண்கள். என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.
- ராஜ திருமகன்
