ADVERTISEMENT

விஜய்யின் ஜனநாயகன் : புதிய அப்டேட்!

Published On:

| By Kavi

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பேசுபொருளாகியிருக்கிறது நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்.

ADVERTISEMENT

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான ஒரு வலுவான அச்சாரமாகப் பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடுகள், ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பைம் கிளப்பியுள்ளது.

படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிடும் போஸ்டர்கள் ஒவ்வொன்றும் ஒருவித அரசியல் அர்த்தத்தையும், சமூகக் கருத்தையும் உள்ளடக்கியதாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT

கடந்த அக்டோபர் 13, 2025 அன்று, நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் ‘கயல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அறிமுக போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஜனவரி 26, 2025 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான முதல் லுக் போஸ்டர், விஜய்யை மக்கள் கூட்டத்தின் மத்தியில் செல்ஃபி எடுக்கும் காட்சியுடன் சித்தரித்து, ‘மக்களின் நம்பிக்கை ஒளி’ என்ற வாசகத்துடன் வெளியானது.

ADVERTISEMENT

அதே நாளில் வெளியான மற்றொரு போஸ்டரில், விஜய் சாட்டையுடன் தோன்றி, ‘நான் ஆணையிட்டால்’ என்ற எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலின் வரிகளுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு, விஜய்யின் அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே கோடிட்டுக் காட்டியது.

ஜூன் 22, 2025 அன்று, விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘ஸ்வாகி காப்’ தோற்றப் போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய் பரவி விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 6) புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ். விஜய்யை சுற்றி மக்கள் கூட்டம் இருப்பது போன்ற அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், விஜய், பூஜா ஹெக்டேவுடன் பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share