தாங்கள் நடிக்கும் படத்தை தாங்களே தயாரிக்கும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ரொம்பக் குறைவு . முதலில் பானுமதி சண்டிராணி மூலம் அதைச் செய்தார் என்றாலும் அது தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் என்பதால் அது செல்லாது.
தமிழில் தான் நடிக்கும் படத்தை தானே தயாரித்து நடித்த முதல் நபர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்தான்
தான் நினைக்கும் விசயங்களை நடிகராக மட்டும் இருக்கும் படங்களில் சொல்ல முடியவில்லை என்ற எண்ணம் வெடித்த போதுதான் நாடோடி மன்னன் படத்தை இயக்கி தயாரித்து நடித்து மாபெரும் வெற்றி பெற்றார் எம் ஜி ஆர்.
சிவாஜி நிறைய படங்களைத் தயாரித்து பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் கண்டாலும் இன்னும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஆக்டிவ் மோடில் தான் இருக்கிறது
வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பா சிவாஜியை வைத்தே பல படங்களைத் தயாரித்து வெற்றியும் பெற்றவர் . கடைசியில் அதே தயாரிப்புக் காரணமாக பல நஷ்டங்களுக்கும் ஆளானார்
அடுத்து ஒரு சில அந்தக் கால ஹீரோக்கள் ஓரிரு படங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஓரிரு படங்களைத் தயாரித்துக் கையை சுட்டுக் கொண்டு நிறுத்தியது உண்டு. வெற்றி பெற்றாலும் கூட வேணாம்யா இந்த வம்பு என்று நிறுத்திக் கொண்டவர்களும் உண்டு
அந்த பயம் இல்லாமல் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் நடிகர் கமல்ஹாசன்.
ரஜினி ஒரு சில படங்களைத் தயாரித்து அப்புறம் நிறுத்திக் கொண்டார் .
கமலும் ரஜினியும் தாங்கள் நடிக்காத படங்களைக் கூடத் தயாரித்தார்கள் (கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வள்ளி)
பின்னர் வந்த பலரும்’ நடிச்சமா? சம்பாதிச்சமா? ரியல் எஸ்டேட் , தொழிற்சாலை, ஹோட்டல் , நகைக்கடை , ரெசார்ட் என்று போட்டோமா? பணத்தைப் பெருக்கினோமா ‘ என்று இருந்த்தார்கள் .
விஜய் ஆண்டனி தனது படங்களைத் தானே தயாரித்து உயர்ந்தார் . அப்புறம் விஷ்ணு விஷால் .
மற்றவர்கள் எல்லாம் நடிகராக ஆகி மார்க்கெட் வந்து சம்பாதித்த பிறகு தயாரிக்க ஆரம்பித்தார்கள் . ஆனால் எடுத்த உடனேயே ரிஸ்க் எடுத்தவர் விஜய் ஆண்டனி .
அவரது படம் மூலம் அறிமுகமானதாலோ என்னவோ அதே ரூட்டில் பயணிக்கிறார் ஆரவ்.
விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் அறிமுகானவர் ஆரவ்.அதன் பிறகு மூன்று சுமாரான படங்களில் ஹீரோ, அஜித் , உதயநிதி ஸ்டாலின் படங்களில் வில்லன் என்ற நிலையில் இருக்கும் ஆரவ், ’ஆரவ் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தயாரிப்புக் கம்பெனியை ஆரம்பித்து இருக்கிறார். இதுவரை சொல்லப்படாத படங்களை எடுப்பேன்” என்கிறார் .
பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளர் இவர்தான்.படம் தயாரிக்கும் அளவுக்கு பிக் பாசில் அவ்வளவு காசா கொடுத்தார்கள் ஆரவ்?
— ராஜ திருமகன்
