மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 25) பாமகவினராலும் பல்வேறு வன்னியர் சங்க அமைப்புகளாலும் அனுசரிக்கப்படுகிறது.
காடுவெட்டி குரு நினைவு தினத்தை ஒட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் கோனேரி குப்பம் கல்லூரியில் குரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் குருவிற்கு மரியாதை செலுத்தினார். j guru memorial day ramadoss

அப்போது “மாவீரன் குருவுக்கு வீர வணக்கம்… மாவீரன் நினைவு நாளில் பாமக ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்…” என்று நிர்வாகிகள் முழக்கமிட்டனர். இந்த நிகழ்வின் போது, பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, பாமக செய்தி தொடர்பாளர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
காடுவெட்டி குரு நினைவு தினத்தை ஒட்டி அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,
“ஒரே சொல்லின் மூலம் லட்சக்கணக்கானவர்களை உணர்ச்சிப் பெருக்குக்கு உள்ளாக்க முடியும் என்றால், அந்த சொல் ஜெ.குரு என்பதாகத் தான் இருக்க முடியும். அவர் ராமதாஸால் கண்டெடுக்கப்பட்டு, பட்டைத் தீட்டப்பட்ட வைரம்.
என் மீது எல்லையில்லான அன்பு காட்டிய எனது மூத்த சகோதரன். அவர் நமது போற்றுதலுக்குரியவர். அவரது ஏழாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
அவர் இல்லாத இந்த ஏழு ஆண்டுகளும் வெறுமையாகத் தான் கழிந்தன. அவரது நினைவுகள் மட்டும் தான் ஆறுதலைத் தந்தன. பாமகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதையே தமது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டவர். அவரின் நோக்கத்தை நிறைவேற்ற கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை” என்று தெரிவித்துள்ளார். j guru memorial day ramadoss