பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Shock for Lalu: Elder Son Expelled from Party
லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர்; யூ டியூபர்; முன்னாள் அமைச்சர்; திடீரென சிவபெருமான், கிருஷ்ணன் உள்ளிட்ட வேடங்களில் வலம் வந்து பேசுபொருளாகிவிடுவார். லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முகமாக இருக்கிறார்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ்- ராஷ்டிரிய ஜனதா தளம்- இடதுசாரிகள் இணைந்து வலுவான கூட்டணியை கட்டமைக்கப் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தேஜ் பிரதாப் யாதவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது. ஒரு பெண்ணுடனான படத்தை பகிர்ந்த தேஜ் பிரதாப் யாதவ், அவருடன் 12 ஆண்டுகள் உறவில் இருப்பதாக அறிவித்திருந்தார். தேஜ் பிரதாப் யாதவ், 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் சில மாதங்களிலேயே இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தேஜ் பிரதாப் யாதவின் ஃபேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சையானது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை பாஜக, ஜேடியூ கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனையடுத்து தமது ஃபேஸ்புக் பக்க பதிவை நீக்கிவிட்டார் தேஜ் பிரதாப் யாதவ். அதே நேரத்தில் தமது சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறினார் தேஜ் பிரதாப் யாதவ்.
ஆனால் இதனை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் யாதவ் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக லாலு அறிவித்தார். மேலும் தங்களது குடும்பத்தில் இருந்தும் தேஜ் பிரதாப் யாதவ் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். இதனை தேஜஸ்வி யாதவ் வரவேற்றுள்ளார்.