புதிய உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் நூலகங்கள்… திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம்!

Published On:

| By Selvam

திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் அணியின் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திருச்சியில் இன்று (மே 25) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா, ஏ.என்.ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு கஜேந்திரன், சீனிவாசன், ராஜா, ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். dmk youth wing meeting 15 resolution passed

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

பெகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி பொது மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளும் இளைஞர் அணி நிர்வாகிகளின் இந்தக் கூட்டம், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

‘மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

தீர்மானம் 3:

மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய அரசையும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே கேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளையும், இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 4:

‘மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ் நாட்டுக்கு வழங்கவேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை வழங்குவோம்’ என்ற ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்.

ADVERTISEMENT

தீர்மானம் 5:

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உயர காரணமான இருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 6:

இந்த ஆண்டு வெளியான குடிமைப்பணித் தேர்வு முடிவுகளில் ‘நான் முதல்வன்- போட்டித் தேர்வு’பிரிவில் பயின்று தேர்வான 50 போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 7:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி உட்பட 9 பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை இந்தக் கூட்டம் வரவேற்கிறது.

தீர்மானம் 8:

தமிழர்களின் நகர நாகரிகம் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவும் கீழடி அகழாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார்.

ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடாமல், தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது ‘விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறிவிட்டு, தற்போது அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பி, திருத்தங்களைக் கோரியுள்ளது.

தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 9:

கலைஞர் பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முதல் ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 10:

76 கழக மாவட்டங்களில் 12,000-க்கும் அதிகமான ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களைத் தேர்வுசெய்து இளைஞர் அணியின் கட்டமைப்பை தமிழ்நாடு முழுவதும் வலுப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டம் நன்றியையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 11:

தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம், இந்தித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 12:

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களைக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும்.

தீர்மானம் 13:

திமுகவின் கொள்கைகளையும் அரசின் சாதனைகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், களத்திற்கு நிகராக சமூக வலைத்தளங்களிலும் களமாட, தகவல் தொழில் நுட்ப அணியுடன் இணைந்து, இளைஞர் அணி பணியாற்றும் என இக்கூட்டம் உறுதியேற்கிறது.

தீர்மானம் 14:

தமிழ்நாடு முழுவதும் 76 திமுக மாவட்டங்களில் வார்டு, கிளைகளில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிப்பது, அவர்களின் மூலம் இல்லந்தோறும் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, சட்டமன்றத் தொகுதிகளில் திறக்கப்படாமல் உள்ள ‘கலைஞர் நூலகங்கள்’-ஐ திறப்பது ஆகிய பணிகளை, விரைந்து மேற்கொள்ளுமாறு இளைஞர் அணி நிர்வாகிகளை இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 15:

திமுக அரசு 2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வர இளைஞர் அணி எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று இந்தக் கூட்டம் உறுதியேற்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share