பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் அனைத்து விதமான சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அரசாணை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை ஒரு வாரத்தில் வழங்க வருவாய்த் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எவ்வித சிரமமும் இன்றி மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் சான்றிதழ்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வரலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.