ஐபிஎல் தொடரில் சென்னை தொடங்கி குஜராத் வரை மொத்தம் 1௦ அணிகள் விளையாடி வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 22-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேராக மோதுகின்றன.
இந்தநிலையில் ஒவ்வொரு அணியிலும் பயிற்சியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்கிற விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. அதுகுறித்து நாம் இங்கே பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் பேவரைட் அணிகளில் ஒன்றாக உள்ளது. இதில் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ரூபாய் 3.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.
பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி ரூபாய் 3 கோடியையும், பவுலிங் கோச் டுவைன் பிராவோ ரூபாய் 2.5 கோடியையும் சம்பளமாக பெறுகின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ்
இந்த ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ரூபாய் 3.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.
பேட்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ரூபாய் 2.2 கோடியையும், பவுலிங் கோச் பிரவீன் ஆம்ரே ரூபாய் 2 கோடியையும் சம்பளமாக பெறுகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ்
புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்த ஆண்டு அந்த அணி களமிறங்குகிறது. குஜராத் அணியை பொறுத்தவரை தலைமை பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ராவே பவுலிங் கோச் ஆகவும் திகழ்கிறார்.
இந்த இரண்டிற்கும் சேர்த்து ரூபாய் 3.5 கோடியை நெஹ்ரா சம்பளமாக பெறுகின்றார். பேட்டிங் கோச் கேரி கிர்ஸ்டன் ரூபாய் 2.2 கோடியை சம்பளமாக பெறுகிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா அணி இந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் காணுகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட் ரூபாய் 3.4 கோடியை சம்பளமாக பெறுகிறார்.
பேட்டிங் கோச் ஜேம்ஸ் போஸ்டர் மற்றும் பவுலிங் கோச் பரத் அருண் இருவரும் ரூபாய் 2.4 கோடியை சம்பளமாக பெறுகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
கே.எல்.ராகுல் தலைமையில் லக்னோ அணி இந்த ஆண்டு களம் காணுகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் ரூபாய் 2.5 கோடியையும், பவுலிங் கோச் ஆண்டி பிசெல் ரூபாய் 1.5 கோடியையும் சம்பளமாக பெறுகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ்
இந்த ஆண்டு மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்குகிறது. தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரூபாய் 2.3 கோடி சம்பளம் பெறுகிறார்.
பேட்டிங் பயிற்சியாளர் கிரன் பொல்லார்ட் ரூபாய் 3.8 கோடியும், பவுலிங் பயிற்சியாளர் லசித் மலிங்கா ரூபாய் 3.5 கோடியையும் சம்பளமாக பெறுகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி களம் காணுகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான குமார் சங்கக்கரா ரூபாய் 3.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.
பேட்டிங் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் ரூபாய் 2.2 கோடி சம்பளம் பெறுகிறார். பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ரூபாய் 3 கோடி சம்பளம் பெறுகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கேப்டனாக பாப் டூ பிளசிஸ் தலைமையில் பெங்களூர் அணிஇந்த ஆண்டு களமிறங்குகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ரூபாய் 3.2 கோடி சம்பளமாக பெறுகிறார்.
பேட்டிங் மற்றும் சுழற்பந்து பயிற்சியாளராக இருக்கும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ரூபாய் 2.5 கோடியும், பவுலிங் பயிற்சியாளர் ஆதாம் கிரிபித் ரூபாய் 2.2 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ்
ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறங்குகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ட்ரெவர் பெலிஸ் ஆண்டுக்கு ரூபாய் 4 கோடி சம்பளம் பெறுகிறார்.
பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் ஆண்டுக்கு ரூபாய் 2.4 கோடியும், பவுலிங் பயிற்சியாளர் சார்ல் லாங்வெல்ட் ரூபாய் 2 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பேட் கம்மின்ஸ் தலைமையில் இந்த ஆண்டு ஹைதராபாத் அணி களம் காணுகிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி இருக்கிறார். அவருக்கு ரூபாய் 4 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.
பேட்டிங் பயிற்சியாளரான சைமன் ஹெல்மட் ரூபாய் 2.3 கோடியை சம்பளமாக பெறுகிறார். அந்த அணியின் வேகப்பந்து பயிற்சியாளரான டேல் ஸ்டெயின் ஆண்டுக்கு ரூபாய் 3 கோடியும், சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ரூபாய் 3.2 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நாங்க நலமா இல்லை ஸ்டாலின்” : எடப்பாடி விமர்சனம்!
10 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆவாரா பேராசிரியர் சாய்பாபா? யார் இவர்?
அமலாக்கத் துறை சம்மன்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கலெக்டர்கள் மனு!