சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த வழக்கில் திருச்சி, கரூர், அரியலூர், வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத் துறையின் சம்மனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுவைக் கடந்த நவம்பர் 28ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம் ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மன்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கைக் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெலா எம் திரிவேதி, பங்கஜ் மித்தல் அமர்வு,
“அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனுதாக்கல் செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது,
“சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 4மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகிப் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆட்சியர்கள் சார்பில் இன்று (மார்ச் 6) சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆட்சியர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் மோடி இப்படியா பொய் சொல்வது? – ஸ்டாலின் கேள்வி!