கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான சாய்பாபா மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டு மகாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் சாய்பாபா மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரமில்லை என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இரண்டாவது முறையாக பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்ய தீர்ப்பளித்திருக்கிறது. அதனை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது மகாராஷ்டிரா அரசு.
அது என்ன இரண்டாவது முறையாக என்று பார்த்தோமானால், ஏற்கனவே அக்டோபர் 14, 2022 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அன்று மாலையே மகாராஷ்டிரா அரசு அவரது விடுதலைக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அதனை அவசர வழக்காக எடுத்த உச்சநீதிமன்றம் அடுத்த நாளே அவரது விடுதலைக்கு தடை விதித்தது.
90% இயங்காத உடல்..யார் இந்த சாய்பாபா?
ஆந்திர மாநிலம் அமலாபுரம் பகுதியில் 1967 ஆம் ஆண்டு ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாய்பாபா. தனது 5 ஆவது வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு உடல்ரீதியான பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானார். அவருக்கு இருதய பிரச்சினை, கணைய பிரச்சினை, சிறுநீரக பிரச்சினை, மூளையில் நீர்க்கட்டி, நரம்புகள் பலவீனம், ஒரு பகுதி இயங்காத உடல் என ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. சாய்பாபாவின் உடல் 90 சதவீதம் இயங்காத நிலையில்தான் உள்ளது. அவர் தனது வாழ்வை சக்கர நாற்காலியில் தான் தொடர்ந்து வருகிறார்.
இளம்வயதில் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
பேராசிரியராக பணிபுரியும் போதே தலித், பழங்குடி மக்களுக்கான பிரச்சினைகளில் தொடர்ந்து தனது குரலை பதிவு செய்து வந்தார். 2005 ஆம் ஆண்டு புரட்சிகர ஜனநாயக முன்னணி (Revolutionary Democratic Front) என்ற அமைப்பில் இயங்கினார். அதனைத் தொடர்ந்து AIPRF (All India People´s Resistance Forum) என்ற அமைப்பிலும் செயல்பட்டு வந்தார். அரசியல் சிறைவாசிகளின் விடுதலை குறித்தும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாய்பாபா
- 2013 ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் ஹேம் மிஸ்ரா மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டி பேராசிரியர் சாய்பாபாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். அவரது மொபைல் போன், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பலவற்றையும் அவரது வீட்டிலிருந்து காவல்துறை எடுத்துச் சென்றது.
- 2014 ஆம் ஆண்டு இந்த வழக்கில் மகாராஷ்டிரா காவல்துறை பேராசிரியர் சாய்பாபாவை கைது செய்தது. அவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டமான ஊபா (UAPA) வழக்கு பதியப்பட்டது.
- 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் மகாராஷ்டிரா செஷன்ஸ் நீதிமன்றம் பேராசிரியர் சாய்பாபா, ஹேம் மிஸ்ரா, பிரசாந்த் ராஹி, பண்டு நரோட், மகேஷ் திர்கி மற்றும் விஜய் திர்கி ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு…விடுதலை…மேல்முறையீடு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சாய்பாபா. அந்த மேல்முறையீட்டினை விசாரணை செய்த மும்பை உயர்நீதிமன்றம் அக்டோபர் 14, 2022 அன்று ஊபா சட்டத்தின் கீழ் இவர் மீதான குற்றச்சாட்டினை நிறுவுவதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டு சாய்பாபா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்தது.
பேராசிரியர் சாய்பாபா விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வெளியான வெள்ளிக்கிழமை அன்று மாலையே அவசர அவசரமாக அவரது விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றது மகாராஷ்டிரா அரசு. அடுத்த நாள் சனிக்கிழமையாக இருந்தும் உச்சநீதிமன்றம் அரிதினும் அரிதாக செய்யக்கூடிய வகையில் இந்த வழக்கை விசாரிக்க உடனடியாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வினை அமைத்தது.
உச்சநீதிமன்றம் அக்டோபர் 15, 2022 அன்றே பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பேராசிரியர் சாய்பாபா ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தும் இத்தனை அவசரமாக அவரது விடுதலைக்கு தடை வாங்கியது பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
விடுதலைக்கு தடை விதித்ததுடன் நில்லாமல், மீண்டும் பேராசிரியர் சாய்பாபா வழக்கினை வேறு அமர்வின் மூலம் புதிதாக விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உடல்தானே இயங்கவில்லை! மூளை இயங்குகிறதே!
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, பேராசிரியர் சாய்பாபாவின் உடல் 90 சதவீதம் இயங்க முடியாத நிலையில் இருப்பதைப் பற்றி குறிப்பட்ட போது, உச்சநீதிமன்றம் அவரது மூளை செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டது. நேரடியான களப்பங்களிப்பு தொடர்பான செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், மூளை செயல்பாடுகளே தீவிரவாத செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீவிரவாத செயல்பாடுகளில் மூளைதான் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டது. 90 சதவீதம் இயங்க முடியாத அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுச் சிறையில் வைக்கக் கோரிய கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
மீண்டும் விடுதலை என்ற தீர்ப்பு
மும்பை உயர்நீதிமன்றத்தில் நாக்பூர் அமர்வில் நீதிபதிகள் வினய் ஜோஷி மற்றும் எஸ்.ஏ.வால்மீகி ஆகியோரால் மீண்டும் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று (மார்ச் 5, 2024) தீர்ப்பு வெளிவந்துள்ளது. பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 6 பேரின் மீது பதியப்பட்ட ஊபா வழக்கின் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரில் பண்டு நரோட் 2022 ஆகஸ்ட் மாதத்திலேயே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவோயிஸ்ட் தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பது குற்றமல்ல
கம்யூனிசம் மற்றும் நக்சலிசம் தொடர்பான ஆவணங்களையோ, காணொளிகளையோ வைத்திருப்பதோ டவுன்லோட் செய்வதோ குற்றமாகக் கருதப்பட முடியாது என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பில் ஒரு நபரின் நேரடி பங்களிப்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லாமல், அவர் அந்த அமைப்பு தொடர்பான ஆவணங்களை வைத்திருப்பதாலோ அல்லது அந்த தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டிருப்பதாலோ குற்றத்தில் தொடர்புடையவராக குறிப்பிட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரங்களிலேயே மேல்முறையீடு
இரண்டாவது முறையாக மும்பை உயர்நீதிமன்றத்தினால் பேராசிரியர் சாய்பாபா விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மகாராஷ்டிரா அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டிற்கு சென்றுள்ளது. சக்கர நாற்காலி இல்லாமல் இயங்கவே முடியாத நிலையிலும் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவரை, இரண்டு முறை உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் சிறையில் அடைப்பதற்கு மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருப்பது மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் விமர்சனங்களையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
ஸ்டான் சுவாமிக்கு நடந்த அவலம்
ஏற்கனவே 84 வயது மனித உரிமை செயல்பாட்டாளரும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு, அவரால் டம்ளரை தூக்கி தண்ணீர் குடிக்க முடியாது என்பதால் குழாய் வைத்த டம்ளரைக் கேட்டபோது அதைக்கூட தராமல், அவர் சிறையிலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை இந்தியா முழுதும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அவர் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமலேயே சிறையிலேயே தனது இறுதி ஆண்டுகளைக் கழித்து சிறையிலேயே இறந்து போனார் ஸ்டேன் சுவாமி.
இப்போது சாய்பாபா வழக்கிலும் இதே போன்றதொரு அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருவரது குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் அவரை சிறையில் வைத்திருக்க ஊபா சட்டத்தின் பிரிவுகள் வழிவகுக்கின்றன. இதனால்தான் இந்த ஊபா சட்டத்தினையும் திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்டான் சுவாமிக்கு நடந்தது பேராசியர் சாய்பாபாவுக்கு நடந்துவிடக் கூடாது என்பதே மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கவலையாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– விவேகானந்தன்
பாஜகவின் தேர்தல் பத்திர ரகசியங்கள்..தேர்தலுக்கு முன்பு வெளியிட முடியாது..SBI சொல்வதன் பின்னணி என்ன?
அமலாக்கத் துறை சம்மன்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கலெக்டர்கள் மனு!