மெல்ல திறந்த கதவு.. ஆப்ரேட்டர் செய்த ஆப்ரேஷன்!

Published On:

| By Minnambalam Desk

மோகன், அமலா, ராதா நடிப்பில் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி, 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி வெளியானது ‘மெல்லத் திறந்தது கதவு’. அற்புதமான பாடல்களைக் கொண்ட படம் இது. ஆனால் படம் எல்லா ஊர்களிலும் ஃபிளாப். மதுரையில் ஒரு தியேட்டரில் மட்டும் படம் பிரம்மாதமாக ஓடுகிறது!

படக் குழுவுக்கே காரணம் புரியவில்லை, எப்படி இந்த அதிசயம் என்று புரியாமல் அங்கே போய்ப் பார்த்தால்…

ADVERTISEMENT

படத்தின் கதைப்படி நாயகன் ஒரு பெண்ணைக் காதலிக்க, அவளும் காதலிக்க, கல்யாண சமயத்தில் அவள் இறந்து விட, நாயகன் இன்னொரு பெண்ணை காதலிப்பான். அவளும் செத்துப் போவாள். இதுதான் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி எல்லா ஊருக்கும் அனுப்பிய படம்.

ஆனால், வழக்கம் போலவே அந்த தியேட்டருக்கும் படம் பார்க்க மக்கள் குறைந்த சூழலில், அந்தத் திரையரங்கின் ஆபரேட்டர் ஒரு காரியம் செய்தார்.

ADVERTISEMENT

படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் இரண்டாவது கதாநாயகிக் கதையை தூக்கி முதல் பாதியில் போட்டார். முதல் பாதியில் வரும் காதல் கதை இருக்கே. அந்த இடத்தில் அந்தப் பெண் சாகும் காட்சியை வெட்டி எறிந்து விட்டு அதைத் தூக்கி இரண்டாம் பாதியாக மாற்றிப் போட்டு, அப்படியே படத்தை முடித்து வணக்கம் என்று போட்டார்.

இப்போ கதை என்ன? முதல் காதலில் தோல்வியுற்ற ஒருவன். அடுத்த பெண்ணைக் காதலிக்கும் சூழலில் அவளும் செத்து விடுவாளோ என்ற நிலை. ஆனால் காதல் நிறைவேறியது. சுபம் என்று கதையே மாறி விட்டது. படம் மக்களுக்குப் பிடித்து விட்டது.

ADVERTISEMENT

ஆடிப் போனது படக்குழு. முக்கியமாக படத்தின் எடிட்டருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

பிறகு அந்த ஆப்பரேட்டர் செய்தபடி இவர்களே செய்து படம் ஓட்ட, அப்புறம் பரவால்ல என்ற அளவுக்கு சுமாரான வெற்றியைப் பெற்றது அந்தப் படம்.

இன்று தியேட்டர்களில் படம் திரையிடும் முறை KDM (KEY DELIVERY MESSAGE ) எனப்படும் மறைகுறியாக்கப்பட்ட கோப்பு.

(ENCRYPTED FILE) முறைக்கு மாறி விட்டதால், மேலே சொன்ன மாதிரியான ‘இம்ப்ரூவ்மென்ட்டுக்கு’ எல்லாம் வழி இல்லாமல் போய்விட்டது.

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share