இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களால் தமிழ் சினிமா கொஞ்சம் பதைபதைப்பான உணர்வுக்குள் சென்றது. ஆனால், இந்தத் தகவல்கள் எதிலும் உண்மையில்லை என்று இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் அஷோக் சுந்தர்ராஜன் தகவல் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவினால் மறக்கமுடியாத திரைப்படமான வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தைக் கொடுத்தவர் ஆர்.சுந்தர்ராஜன். எந்தப் படத்திலாவது பயன்படுத்தலாம் என்று இளையராஜா இசையமைத்து வைத்திருந்த ஆறு பாடல்களை வாங்கி, அதிலிருந்து ஒரு திரைக்கதையை உருவாக்கிப் படமாக எடுத்தவர் சுந்தர்ராஜன். இளையராஜாவின் இசைக் காதலால் உருவாக்கப்பட்ட பாடல்களை, இரு காதல் உள்ளங்களாகப் பிரித்து திரைக்கதையில் ஒன்றிணைத்த ஜாம்பவான் இயக்குநராகவே ஆர்.சுந்தர்ராஜன் பார்க்கப்படுகிறார். தமிழகத்தின் ஒவ்வொரு சினிமா ரசிகனின் மனத்திலும் நீங்காத இடம்பிடித்த திரைப்படத்தின் இயக்குநரான சுந்தர்ராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெகுவேகமாகப் பரவியது. சினிமாத் துறையினர் பலரும் இந்தத் தகவலை உறுதி செய்ய முயற்சி செய்ததும், சுந்தர்ராஜனின் வீடு தேடிச் சென்றதும் சுந்தர்ராஜனின் மகன் அஷோக்குக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் வெகுண்டெழுந்த அஷோக் ஃபேஸ்புக் மூலம் தனது தந்தை உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
ஆர்.சுந்தர்ராஜனுடன் காரில் செல்லும் போட்டோ ஒன்றைப் பகிர்ந்த அஷோக், “இயக்குநரும் நடிகருமான என் தந்தை ஆர்.சுந்தர்ராஜன் நலமுடன் இருக்கிறார். அதேநேரம் அவர் சென்னையில் படப்பிடிப்பிலும் கலந்துகொள்கிறார். தயவுசெய்து அவரைப் பற்றி தவறான தகவல்களையும், மீம்ஸ்களையும் பகிர்வதை முதலில் நிறுத்துங்கள். அவருடைய உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று கோபத்துடன் பகிர்ந்திருக்கிறார்.
**-சிவா**
