Ranji Trophy : 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் தமிழ்நாடு அணி

Published On:

| By christopher

கடந்த ஜனவரி மாதம் துவங்கிய 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சி ட்ராபி தொடரில் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி செலுத்தி வருகிறது. லீக் சுற்று போட்டிகளில், 7 ஆட்டங்களில் 4-இல் வெற்றி, 2-இல் டிரா மற்றும் ஒரே ஒரு போட்டியில் தோல்வி என மொத்தம் 28 புள்ளிகளை பெற்று ‘எலைட் குரூப் சி’ பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தனது காலிறுதி ஆட்டத்தில் 2023ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையை வென்ற சவுராஷ்டிரா அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது.

183 ரன்களுக்கு ஆல்-அவுட்!

இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து, சவுராஷ்டிராவுக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஹர்விக் தேசாய் ஒருபுறத்தில் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்துவந்த நிலையில், மறுபுறத்தில் தமிழ்நாடு அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் ஆகியோரின் சூழலில் சிக்கி அனைவரும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்களை பறிகொடுத்து வந்தனர்.

இதன் காரணமாக, முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா அணி 183 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணிக்காக ஹர்விக் தேசாய் மட்டும் 83 ரன்கள் சேர்த்திருந்தார். தமிழ்நாடு அணிக்காக சாய் கிஷோர் 5 விக்கெட்களையும், அஜித் ராம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய தமிழ்நாடு அணி, கேப்டன் சாய் கிஷோர் (60 ரன்கள்), பாபா இந்திரஜித் (80 ரன்கள்), பூபதி குமார் (65 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால், 338 ரன்களை குவித்தது.

7 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதி!

155 ரன்கள் பின்தங்கிய நிலையில், சவுராஷ்டிரா அணி தனது 2வது இன்னிங்ஸை விளையாட களமிறங்கியது. ஆனால், 2வது இன்னிங்ஸிலும் சாய் கிசோர் மற்றும் அஜித் ராம் ஆகியோரின் சூழலை சமாளிக்க முடியாத சவுராஷ்டிரா அணி, வெறும் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. செதேஷ்வர் புஜாரா மட்டும் 46 ரன்களை சேர்த்திருந்தார். தமிழ்நாடு அணிக்காக, சாய் கிஷோர் 4 விக்கெட்கள், சந்தீப் வாரியர் 3 விக்கெட்கள் மற்றும் அஜித் ராம் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

இதன் காரணமாக, தமிழ்நாடு அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அபார வெற்றியையே பதிவு செய்து, 7 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கடைசியாக 2014-15 ரஞ்சி கோப்பை தொடரின்போது தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது என்பதும், கடைசியாக 1987-88 ரஞ்சி கோப்பை தொடரில் தான் தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அணி, இந்த தொடரின் துவக்கத்தில் இருந்து தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இத்தனை ஆண்டுகால ரஞ்சி கோப்பை தாகத்தை இம்முறையாவது தமிழ்நாடு அணி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகிழ்

ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்!

பெண்களுக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்திய ’மகளிர் மட்டும்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share