ADVERTISEMENT

இந்திரா முதல் கேப்டன் பிரபாகரன் ரீரிலீஸ் வரை… இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள் – ஒரு பார்வை!

Published On:

| By uthay Padagalingam

indra to captain prabhakaran this week theater release list

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’, அயான் முகர்ஜியின் ‘வார் 2’ இரண்டும் உலகம் முழுக்க கல்லா கட்டி வருகின்றன. குறிப்பாக, ‘ஜெயிலர்’ படத்தின் வசூலை முறியடிக்கும் வகையில் ரஜினிகாந்தின் இன்னொரு வெற்றியாக ‘கூலி’ மாறி வருவதாகச் சொல்கிறது தமிழ் திரையுலகம்.

இப்படியொரு சூழலில், ’இந்த வாரம் நிறைய படங்கள் எப்படி வெளியாக முடியும்’ என்கிற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் நிச்சயம் இருக்கும். அதனைப் பிரதிபலிக்கிறது வரும் 22ஆம் தேதியன்று வெளியாகிற திரைப்படங்களின் எண்ணிக்கை.

ADVERTISEMENT

இந்திரா

’ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி நாயகனாகத் தோன்றுகிற படமிது. சபரீஷ் நந்தா இதனை இயக்கியிருக்கிறார். அஜ்மல் தஹ்சீன் இதற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் கொடூர வில்லனாக நடித்த இப்படத்தில் மெஹ்ரீன் பிர்ஸடா, அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ்குமார், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருக்கின்றனர். ’க்ரைம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையில் அமைந்திருக்கிற இப்படத்தின் நீளம் 128 நிமிடங்கள்.

பரதா

பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பரதா’ தெலுங்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இதில் தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிரிஷ், கௌதம் மேனன், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆணாதிக்கத்தைச் சாடுகிற கதையம்சம் உள்ளதாக, பெண்ணுரிமையைப் பேசுவதாக இப்படம் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

த்ரிபனதாரி பார்பரிக்

சத்யராஜ், வசிஷ்டா, சத்யம் ராஜேஷ், உதயபானு உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிபனதாரி பார்பரிக்’. இதனை மோகன் ஸ்ரீவத்சா இயக்கியுள்ளார். இது ‘பேண்டஸி த்ரில்லர்’ வகைமையில் அமைந்த படம் எனச் சொல்லப்படுகிறது.

மேஹாலு செப்பின ப்ரேம கதா

’நிலவுக்கு என்னடி என் மேல் கோபம்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஃபியா கடூன் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘மேஹாலு செப்பின ப்ரேம கதா’வும் இந்த வாரம் வெளியாகிறது. இதில் நரேஷ் அகஸ்தியா, சுமன், தணிகலபரணி, வித்யுலேகா, ஆம்னி உடன் ராதிகாவும் நடித்துள்ளார். விபின் இதனை இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

தலவரா

அர்ஜுன் அசோகன், ரேவதி, அசோகன், பிரியதர்ஷினி, பிரசாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிப்பில், அகில் அனில்குமார் இயக்கியுள்ள ‘தலவரா’ படமும் இந்த வாரம் வெளியாகிறது. எலக்ட்ரானிக் கிளி, விஜய் ஆனந்த் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான இதன் பாடல்களை மலையாள ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

அதோடு மற்றொரு மலையாளப் படமான ‘தி கேஸ் டயரி’ நாளை (ஆகஸ்ட் 21) வெளியாகிறது.

நோபடி 2

யாருமே எதிர்பார்க்காத ‘ஆக்‌ஷன்’ பட அனுபவத்தைத் தந்த ‘நோபடி’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெளியாகிறது. முந்தைய படத்தில் நடித்த பாப் ஆடன்கிர்க், கானி நீல்சன், கேஜ் முன்ரோ, பைஸ்லே கடோரத் உடன் ஷரோன் ஸ்டோனும் இதில் இருக்கிறார். ’நோபடி 2’வை டிமோ ஜஜாண்டோ இயக்கியுள்ளார்.

இது போக ’பிரிங் ஹெர் பேக்’, ‘ரிலே’ ஆகிய படங்களும் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கேப்டன் பிரபாகரன்

அனைத்துக்கும் மேலாக, இந்த வாரம் 4கே தரத்தில் ‘கேப்டன் பிரபாகரன் ‘ரீரிலீஸ் செய்யப்படுகிறது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது என்பதும், மறைந்த விஜயகாந்தின் 100வது படம் இது என்பதும் நாம் அறிந்ததே. 90ஸ் கிட்ஸ் பலரும் நெஞ்சில் போற்றிப் பாதுகாக்கிற ‘கே.பி’ அனுபவங்களை மீண்டும் தூசி தட்டி சிலாகிக்கிற அனுபவத்தை இப்படம் நிச்சயம் ஏற்படுத்தும்.

மேற்சொன்ன படங்கள் எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தரும் என்று தெரியவில்லை. இறுதிக்கட்டம் வரை மாற்றத்தைச் சந்திக்காமல் எந்தெந்த படங்கள் தியேட்டரை வந்தடையும் என்றும் தெரியவில்லை.

அந்த சந்தேகத்தை மீறி, திரையரங்கில் கூட்டம் திரளச் செய்யும் வகையில் இந்த வாரம் அமையும் என்ற நம்பிக்கை திரையுலகினரிடம் உள்ளது. இவற்றில் எது ரசிகர்களின் வரவேற்பை அள்ளப் போகிறது என்பதை விரைவில் காணலாம்..! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share