பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 12வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பேசினார். அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமல்ல, உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகள் எனப் பல காரணிகள் உள்ளன என்று கூறினார். சந்தையில் ஒரு குறிப்பிட்ட மாற்று விகிதத்தை நிலைநிறுத்தவோ அல்லது நிர்ணயிக்கவோ ரிசர்வ் வங்கி (RBI) தலையிடுவதில்லை என்றும், மாறாக சந்தை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தவே அது தலையிடுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாணயச் சந்தையில் உலகளாவிய மாற்றங்கள் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், “அமெரிக்காவின் பணவியல் கொள்கை மற்றும் பிற முக்கிய சர்வதேச நாணயங்களில் ஏற்படும் மாற்றங்கள் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சந்தையில் ஏற்ற இறக்கம் அல்லது நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் அந்தச் சூழலைக் கையாள ரிசர்வ் வங்கி களத்தில் இறங்குகிறது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் விலையை நிர்ணயிப்பதற்காக அல்ல, மாறாக குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களைச் சீர்செய்வதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ள அந்நிய நாணயத்தைப் பயன்படுத்துகிறது. மிக அவசியமான சூழலில் மட்டுமே ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவுகள், அந்நிய மூலதன வரத்து மற்றும் பிற முக்கிய பொருளாதார நாடுகளில் நாணய மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது அல்லது குறைப்பது குறித்த விவாதங்கள், மற்றும் டாலருக்கு நிகரான ஜப்பானிய யென் மற்றும் கொரியன் வான் போன்ற வலுவான நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் கடும் சரிவு ஆகியவை பல்வேறு நாடுகளுக்கும் அவற்றின் நாணயங்களுக்கும் இடையிலான மாற்று விகிதங்களைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் அடங்கும்.
கச்சா எண்ணெய், உரங்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதில் இந்தியா பெரிதும் சார்ந்திருக்கிறது. இவற்றிற்கான கட்டணங்களை டாலர் வடிவிலேயே பெருமளவில் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, அந்நியச் செலாவணியை நிர்வகிப்பது மிக முக்கியமானதாகிறது” என்று தெரிவித்தார்.
