Abhishek Sharma: ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்றபின், இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியிலேயே இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2வது டி20 ஆட்டத்தில் இந்தியா இன்று (ஜூலை 7) களம் கண்டது. அதே ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், கடந்த போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இப்போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து இந்திய அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில், 2வது ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனால், மறுமுனையில் அபாரமாக விளையாடிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
2வது சர்வதேச டி20 போட்டியிலேயே சதம் விளாசிய அபிஷேக் சர்மா, மிக குறைந்த போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக, 3வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து, தீபக் ஹூடா இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
தொடர்ந்து, இவருடன் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாத் 77 (47) ரன்களும், அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் 48 (22) ரன்களும் விளாச, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்கள் குவித்தது.
பின், 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, துவக்க ஆட்டக்காரர் இன்னொசென்ட் கையா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து வந்த பிரைன் பென்னட் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 26 ரன்கள் குவித்தாலும், 4வது ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்றோரு துவக்க ஆட்டக்காரரான வெஸ்லி மதேவேரே 43 ரன்கள் சேர்த்தபோதும், மறுமுனையில் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
கடைசியில், லூக் ஜோங்வே மட்டும் 33 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளிக்க, ஜிம்பாப்வே அணி 134 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின்மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது. இப்போட்டியில், சதம் விளாசிய அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த 2 அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி, இதே ஹராரே மைதானத்தில் ஜூலை 10 அன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்: 7 பேர் பலி, 7000 பேர் பாதிப்பு!
பெங்களூர் விமான நிலையம்… இளம்பெண்ணின் வெடிகுண்டு மிரட்டல்: என்ன காரணம் தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்!
பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?