What do the Hathras crowd deaths say?

பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

ஆக்ராவுக்கு அருகிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு 121 பேர் இறந்துள்ளார்கள். இந்த மாவட்டத்தின் கிராமப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றுக்கு அருகே நடந்த ஓர் ஆன்மிகக் கூட்டத்தில்தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்வு என்னவென்றால் போலே பாபா என்பவர் நடத்திய சத்சங் என்ற ஆன்மிகச் சொற்பொழிவுதான் அது.

இரண்டு லட்சம் பேருக்கு மேல் எளிய கிராம மக்கள் இந்தச் சொற்பொழிவுக்குக் கூடியதாகக் கூறப்படுகிறது. சொற்பொழிவு முடிந்து பாபா காரில் புறப்பட்டுச் செல்லும்போது அவர் முன் சென்று வணங்க வேண்டும் என்றோ அல்லது அவர் காலடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோ மக்கள் முண்டியடித்துச் சென்றதாகவும் அப்போது அந்த நெரிசலில் பலர் மிதிபட்டு இறக்க நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இதுபோன்ற ஆன்மிக பாபாக்களை நம்பி செல்லாமல், தலித் பகுஜன் மக்கள் பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் பயணிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இறந்தவர்களில் கணிசமானோர் தலித்துகள் என்று கூறப்படும் நிலையில் அவர் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

ஆங்கிலத்தில் ‘ஸ்டாம்பீட்’ எனப்படும் இது போன்ற கூட்ட நெரிசல் மரணங்கள் நடப்பது புதிதல்ல. அலகாபாத்தில் கும்பமேளா என்ற மாபெரும் மக்கள் திரள் நிகழ்வில் 1954ஆம் ஆண்டு 800 பேர் இறந்தார்கள். அதன் பிறகு அரசு கூட்டத்தை நெறிப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை செய்தாலும், கும்பமேளாவில் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்ந்து நிகழத்தான் செய்கின்றன.

கோடிக்கணக்கானவர்கள் கூடும் இந்த பிரயாகை (அலகாபாத்) கும்பமேளா நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அந்த புனித தினத்தன்று கங்கை, யமுனை சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் மிகப்பெரிய புண்ணியம் என்ற நம்பிக்கைதான் இவ்வளவு பிரம்மாண்டமான மக்கள் திரள் கூடுவதற்குக் காரணம். தமிழ்நாட்டில் அதன் மற்றொரு வடிவான மகாமகம் என்ற நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நிகழும். ஜெயலலிதா முதல்வரானபோது 1992ஆம் ஆண்டு அவர் தோழி சசிகலாவுடன் மகாமகக் குளத்தில் நீராடச் சென்றார். ஏற்கனவே சமாளிக்கக் கடினமான கூட்ட நெரிசல் இதனால் அதிகமாகி, கூட்ட நெரிசலில் மிதிபட்டு ஐம்பது பேர் இறந்து போனார்கள்.

உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் பல்வேறு புண்ணியத் தலங்கள், யாத்திரைத் தலங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசல் மிதிபாடுகள் அவ்வப்போது நடக்கின்றன. சபரி மலையில் மகர ஜோதி தரிசனம் என்று 2011ஆம் ஆண்டு நூறு பேர் நெரிசலில் மிதிபட்டு இறந்தார்கள். காஞ்சியில் மூளியானதால் என்றோ குளத்தில் வீசப்பட்ட கடவுள் சிலையை நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து வெளியே வைத்து அத்தி வரதர் தரிசனம் என்று லட்சக்கணக்கான பேர் அதைப் பார்க்க செல்வார்கள். இந்த நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு நிகழ்ந்தபோது எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் கூட்ட நெரிசலில் சிக்கி நாலு பேர் இறந்து போனார்கள். சுதந்திர நாட்டில் மக்களாக விரும்பி இவ்வகையாக செயல்படுவதை அரசு தடுக்க முடியாது. பெருந்திரளாக மக்கள் கூடினால் அதை நெறிப்படுத்துவதும் கடினம்தான்.

ஆனால், அரசாகவே தன் அலட்சியத்தால் நெரிசலை உண்டாக்குவதும் உண்டு. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் 2005 சென்னை வெள்ளத்துக்குப் பிறகு நிவாரண பொருட்கள் விநியோகத்தில் இரண்டு முறை கூட்ட நெரிசல் மரணங்கள் ஏற்பட்டன. அரசு தரும் புடவை, வேட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை முதலில் பெற வேண்டும் என்று முண்டியடித்ததில் மக்கள் உயிரையே பறி கொடுத்தனர். முதல்முறை வியாசர்பாடியில் இத்தகு சம்பவத்திலிருந்து பாடம் கற்காத அரசு, எம்.ஜி.ஆர் நகரிலும் 42 உயிர்கள் மரணமடைய காரணமானது. முதலில் வருபவர்களுக்குத்தான் பொருட்கள் கிடைக்கும் என்ற வதந்தி பரவியதால்தான் இவ்விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது. அரசு அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என உறுதியளித்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், மக்களாகவே பேரார்வத்துடன் கலந்து கொள்ளும் மத நிகழ்வுகளில் நடக்கும் விபத்துகளை எப்படித் தவிர்ப்பது? மக்களிடம் பகுத்தறிவை வளர்ப்பது ஒன்றே அதற்கு வழி.

பகுத்தறிவு ஏன் அவசியம்?

பகுத்தறிவு என்பது இறை நம்பிக்கைக்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. பகுத்தறிவு தொடர்ந்து செயல்படும்போது இறை நம்பிக்கையும் குறையலாம் என்றாலும், அது மட்டுமே பகுத்தறிவின் பயனல்ல; அதன் இலக்குமல்ல. பகுத்தறிவு என்பது மூட நம்பிக்கைக்கு எதிரானது. மனிதனுக்கு மேலான ஓர் இயற்கை சக்தி இருக்கிறது. அது மனிதர்களைப் பாதுகாக்கிறது என்று நினைப்பதோ, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து பூஜிப்பதோ மனிதர்களின் தொன்று தொட்டு செயல்பாடு. யாருக்கும் பாதிப்பில்லாமல் அது நிகழும் வரை அது பகுத்தறிவின் பயணத்தை தடை செய்யப் போவதில்லை. அதனால்தான் அண்ணா “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று பகுத்தறிவுக்கான மற்றொரு விளக்கத்தை திருமூலரின் வார்த்தைகளிலிருந்து சொன்னார்.

ஆனால், மகாமக குளத்தில் குறிப்பிட்ட தினத்தில் நீராடினால் அது புனிதம், புண்ணியம் என்பது மூட நம்பிக்கை. இந்துக்கள் அனைவரும் அன்றைக்கு கும்பகோணம் வந்து நீராட நினைத்தால் என்னவாகும்? அது சாத்தியமேயில்லை. அப்படிக் குளிக்காதவர்கள் எல்லாம் நரகத்துக்குச் செல்வார்களா என்ன? அப்படி ஓர் அபத்தமான ஏற்பாட்டை எந்த இயற்கை சக்தியாவது செய்யுமா? முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதாவே அது போன்ற ஒரு மூட நம்பிக்கையை ஏற்று, பின்பற்றினால் அது மக்களையும் பற்றிக் கொள்ளுமல்லவா?

உண்மையில் ஆன்மிகத்தில் சிறந்த பெரியவர்கள் என்ன சொல்வார்கள்? இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்றுதான் சொல்வார்கள். தங்கள் பக்தியால் இறைமையையும் தங்கள் குரலுக்குச் செவிசாய்க்க செய்ய முடியும் என்றுதான் பக்திக் கதைகள் எல்லாமே கூறுகின்றன. கபீர் போன்ற புனிதர்கள் புனிதத் தலங்கள், சடங்குகள் என எதையும் நம்பியதில்லை. அவர்கள் மனதில் இறைவனை உண்மையாக உருகி வழிபடுவதே போதுமானது என்றுதான் வலியுறுத்தினார்கள்.

இதன் பொருள் என்னவென்றால் இறைமை என்பது ஒருவரது அகவெளியின் தரிசனம் என்பதுதான். நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில் என்று கேட்டார் சித்தர். காக்கைச் சிறகினிலே கண்ணனின் கருமையை பாரதி கண்டது போல அகவெளி தரிசனம் என்பது இறைமையை எங்கும் காணும்.  எந்த ஒரு குறிப்பிட்ட புறப்பொருள் மீதும் இதுதான் புனிதம் என்று மயங்குவதோ, இந்த தினத்தில் புனிதத்தலத்தில் மூட்டப்படும் தீயினை காண்பதுதான் புண்ணியம் என்றோ, மோட்சம் என்றோ நினைப்பது மூட நம்பிக்கை.

தன்னுடைய அகவெளியில் இறைமையைக் கண்டுகொள்ளும் ஆற்றலில்தான் ஒவ்வொரு மனித உயிரியும் தன்னுடைய இறையாண்மையையும் காண்கிறது. அதனால்தான் பல்லவ அரசனுக்குப் பணியாமல் “நாம் யார்க்கும் குடியல்லோம்” என்றார் திருநாவுக்கரசர். தன் அகவெளியில்தான் சிந்தனையையும், தர்க்கத்தையும் உருவாக்கிக் கொள்கின்றனர் மனிதர்கள். இந்த அகவெளி என்பதை ஆன்மா என்றோ உடலிலிருந்து வேறுபட்டது என்றோ நினைக்கத் தேவையில்லை. அது புலனுணர்வால் சாத்தியப்படும் நினைவுகளின் சேகரத்தினால் உருவாவதுதான். அதாவது புறவெளியை புலன்களால் வடிகட்டி நினைவுகளால் உருவாக்கிக் கொள்வதுதான் அகவெளி.

ஆனால், அது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்டதாகவும். அதே சமயம் பிற மனிதர்களுடன் பொதுவானதாகவும் இருப்பதில் பிறப்புதான் அரசியல். அதாவது அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பொதுவெளியும், ஒவ்வொருவரின் தனித்துவமான அகவெளியும் சந்திப்பதுதான். அரசியல் என்பதால்தான் இறையாண்மையின் ஊற்றுக்கண் ஒவ்வொரு தனிநபரின் அகவெளியில் அமைந்துள்ளது. அங்கேதான் இறைமை என்ற கருத்தாக்கத்தின் வேரும் இருக்கிறது. ஆனால், அகவெளியிலிருந்து இறைமையையும், இறையாண்மையையும் அகற்றி வெளியே புறப்பொருளில் ஒரு சிலையிலோ, புனித அடையாளத்திலோ, மணிமுடியிலோ, செங்கோலிலோ, அரியாசனத்திலோ வைத்து புனிதப்படுத்தும்போது மனிதர்கள் வெறும் கும்பல்களாக மாறுகிறார்கள். கும்பலில் மோதிச் சிக்குண்டு, மிதிபட்டு இறக்கிறார்கள்.

பொதுக்கள சிந்தனையும், கும்பல் மனோபாவமும்

பல்வேறு வர்க்கங்களை, சமூகக் குழுக்களை சார்ந்த மனிதர்களை இணைத்து அரசியல் இயக்கமாக மாற்றும்போது சில பொதுக் குறியீடுகள், சின்னங்கள், கட்சிக் கொடிகள் என்பதெல்லாம் உணர்வுபூர்வமான அடையாளங்களாக மாறும். அதே போலத்தான் தலைவர்களும். கட்சியின் மீது, தலைவர் மீதான தீவிர ஈடுபாடு என்பது எந்த நேரத்திலும் பொதுக்கள சிந்தனையை (Public Reason) என்பதை புறக்கணிக்காததாக இருக்க வேண்டும். ஆனால், எப்படி அகவெளி பக்தி, இறையுணர்வு என்பது புற அடையாளங்கள் சார்ந்த மூட நம்பிக்கையாக மாறுகிறதோ அதே போலத்தான் பொதுக்கள சிந்தனை என்பது புறக்கணிக்கப்பட்டு கண்மூடித்தனமான தலைமை வழிபாடாக மாறுகிறது.

இது இந்தியாவில்தான் நடக்கிறது என்பதல்ல. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்களைப் பார்க்கும்போது மக்களாட்சி ஒருபோதும் முதிர்ச்சியடையாதோ என்ற ஐயம் ஏற்படத்தான் செய்கிறது.  அவர் மீது பண மோசடி, பாலியல் அத்துமீறல், பொய் சொல்லி ஏமாற்றியது என்பது போல பல கடுமையான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்குகள் பல்வேறு நிலைகளில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டபடி உள்ளன; சிலவற்றில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதற்கெல்லாம் மேலாக அவர் கடந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றபோது, தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் அவர் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு அமெரிக்க நாடாளுமன்றத்தைத் தாக்கச் செய்தார். இப்படிப்பட்ட மனிதர்தான் அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக்குவார் (Make America Great Again – MAGA) என்று அவருடைய ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராகிவிட்டார்; வெற்றி பெற்றாலும் வியப்பதற்கில்லை.

அமெரிக்காதான் நவீன உலகின் மூத்த மக்களாட்சிக் குடியரசு. அது அரசியலமைப்பு சட்டம் இயற்றி அரசனில்லாத குடியரசாகி 250 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ராணுவ பலம், பொருளாதாரம் ஆகியவற்றில் உலகின் முதன்மையான வல்லரசு. மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நாடு. உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு. கல்வியிலும், ஆய்விலும் உலகில் முதன்மை வகிக்கும் நாடு. அப்படிப்பட்ட நாட்டில் டிரம்ப் போன்ற ஓர் அறியப்பட்ட குற்றவாளி மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிபர் ஆகலாம் என்ற சூழல் நிலவுவது பொதுக்கள சிந்தனை என்ற ஒன்று சாத்தியமா என்ற ஐயத்தையே பலருக்கும் ஏற்படுத்துகிறது.

டிரம்ப்பின் ஆதரவு தளத்தில் நிறவெறி சார்ந்த மூட நம்பிக்கைகள், கிறிஸ்துவ மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசிய வெறி, சிந்தனையாளர்கள் மீதான வெறுப்பு, ஆணாதிக்க மனோபாவம் எனப் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன. இவரை எதிர்த்து நிற்கும் இன்றைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ, ஜனநாயகக் கட்சியோ, இறைமறுப்பாளர்கள் கிடையாது. ஆனால், பொதுக்கள சிந்தனை ஆதரவாளர்கள். மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள்.

இந்த அமெரிக்க அரசியல் முரண்களத்தை நன்றாகச் சிந்தித்தால் பகுத்தறிவு என்பது இறை மறுப்பு என்பதல்ல, பொதுக்கள சிந்தனையை ஆதரிப்பது, மனித உரிமைகளை ஆதரிப்பது, தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் காட்டும் கும்பல் மனோநிலை என்பது மூட நம்பிக்கையால் மக்களாட்சியை சிதைக்கவல்லது. அதனால்தான் மாயாவதி, அம்பேத்கரை பின்பற்றுவதன் அவசியத்தைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பகுத்தறிவு பகலவன் பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் நாம் நமது மக்களாட்சியின் ஆரோக்கியத்துக்காக நினைக்காமல் இருக்க முடியாது.  

கட்டுரையாளர் குறிப்பு:

Rationality and democracy - What do the Hathras crowd deaths say? by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீட் தேர்வும் இந்திய மக்களாட்சியும்

நாற்பதும் நமதே! தமிழ்நாட்டின் தனித்துவமும் இந்திய அரசியலும்!

கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ்!

இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லையே… அப்டேட் குமாரு

மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

விடாமுயற்சி செகண்ட் லுக்… மோட்டிவேஷன் சொன்ன அஜித்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?

  1. Ontrae kulam oruvanae thevan..thiru moolah solvadhu tamilnattukku right…ulahanaduhalukkana podhumaraiya ventral illai..ellamadhangalum avrthammadhangalae mudhanmai enum manobavam undu…Christian countries Islamic are examples like Hinduism..orae nal vazhipattai matruvoem allael seperarate seperate important city or various town wise according to the population of devotees to be if arranged will safe…pozhudhu poekku amsangalal uyi vadhai seidhal paavam..
    First our life second iraivazhipadu..Suvari irundhal sidhiram varaiyalalam..nammaicharndha uravuhalukkaha thunpathai thavirppoem..lives with soul and blood not by costic iron…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *