இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வந்த ராணுவ தாக்குதல்கள் இன்று முடிவுக்கு வந்தன. India-Pakistan conflict ends
அமெரிக்கா தலையிட்டு இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி, போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரலிடம் பேசியதை தொடர்ந்து இரு தரப்பும் முழு சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை சார்பில் இன்று (மே 10) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது கடற்படை கேப்டன் ரகு நாயர் கூறுகையில், “கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவப்படை சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இந்திய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்வதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.
பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலையும் இந்தியா வலிமையுடனும் பொறுப்புடனும் எதிர்கொண்டது. இனியும் அத்துமீறல்களை நிகழ்த்தினால் உரிய வகையில் பதில் அளிக்கப்படும்” என்று கூறினார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “தவறான தகவல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
பாகிஸ்தான் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது. அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகளால் எந்த ஒரு மத வழிபாட்டுத்தலமும் இலக்காக நிர்ணயிக்கப்படவில்லை” என்று கூறினார்.
கர்னல் சோபியா குரேசி கூறுகையில், “இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, எஸ்.400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டோம் என பாகிஸ்தான் கூறியது முற்றிலும் பொய்.
மசூதிகளை தாக்கியதாக கூறியதும் பொய். வழிபாட்டு தலங்களை இந்தியா தாக்கவில்லை. எனினும் பாகிஸ்தான் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய நிலம் மற்றும் வான்வெளி சொத்துகளுக்கு இந்திய ராணுவம் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் மே 12 ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. India-Pakistan conflict ends