ரஷ்ய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. ரஷ்யா மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்தும் (UAE) கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பும், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்படுவதற்கு முன்பும் போதுமான கையிருப்பை உறுதி செய்வதற்காக இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ஜூன் மாதத்தில் ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளன.
2.66 மில்லியன் பீப்பாய் இறக்குமதி:
இந்த மாதம் ஜூன் 19 வரை இந்தியா ரஷ்யாவிலிருந்து தினசரி சராசரியாக 26.6 லட்சம் பீப்பாய்கள் (BPD) கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது மே மாதத்தில் தினசரி 19.1 லட்சம் பீப்பாய்களாக இருந்தது. இதன் மூலம், ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாகத் தொடர்கிறது. ஜூன் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா தினசரி 6.36 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது மே மாதத்தின் சாதனை அளவான தினசரி 6.44 லட்சம் பீப்பாய்களுக்கு நெருக்கமாக உள்ளது. சவூதி அரேபியாவிலிருந்து தினசரி இறக்குமதி 3.84 லட்சம் பீப்பாய்களாக இருந்தது. அதே நேரத்தில், வெனிசுலா ஒரு நாளில் 2.09 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில், இந்தியாவின் நான்காவது பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி:
மறுபுறம், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி மே மாதத்தில் ஒரு நாளைக்கு 252,000 பீப்பாய்களாக இருந்த நிலையில், தற்போது 91,000 பீப்பாய்களாகக் குறைந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் கவர்ச்சிகரமாக உள்ளது. அதே சமயம், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அதிகரித்த கொள்முதல் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவியது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகும். மேலும், தனது கச்சா எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் திரவ எரிவாயு (LPG) தேவைகளுக்காக வளைகுடாப் பகுதியை பெரிதும் சார்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி எவ்வளவு காலம் திறந்திருக்கும்?
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைக் கடுமையாகப் பாதித்தது. இந்த நீர்வழிப்பாதை உலகின் எண்ணெய் நுகர்வில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு முக்கிய வழித்தடமாகும். இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் எண்ணெய் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்தப் போர் நிறுத்தம் நீடிக்குமா என்பது குறித்த கவலைகள் நீடிக்கின்றன.
