ராஜன் குறை
கவின் என்ற டி.சி.எஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த பட்டியலின இளைஞர், சென்ற வாரம் ஆகஸ்டு 27-ஆம் தேதி திருநெல்வேலியில் பட்டப்பகலில் சுர்ஜித் என்ற மேல்படிநிலை ஜாதி இளைஞரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அனைவரும் பார்க்கும்படியாகவே இந்த கொலையை சுர்ஜித் செய்துள்ளார். இதற்கான காரணம் சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினியும், கவினும் காதலித்து வந்ததுதான் என்று சுபாஷினியே ஏற்றுக்கொண்டுள்ளார்.
சுர்ஜித், சுபாஷினி ஆகியோரின் பெற்றோர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இந்த காதலிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கவின் குடும்பத்தினர் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்தால்தான் கவினின் சடலத்தை பெற்றுக்கொள்வோம் என்று போராடியதை அடுத்து, சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் இருவர் மீதுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சுர்ஜித்தின் தாயார் இன்னம் கைது செய்யப்படவில்லை. வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பலரும் கேட்டுகொண்டதன் பேரில் கவின் குடும்பத்தினர் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகள் செய்துள்ளனர். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களும், அமைச்சர் கீதா ஜீவன் அவர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படுகொலை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ (எம்) ஆகிய கட்சிகள் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கோரியுள்ளார்கள்.
ஜாதி ஆணவம் எப்படி உருவானது?
இந்திய ஜாதி அமைப்பு என்பது சமஸ்கிருத மொழியில் ஆரியர் எனப்பட்ட பார்ப்பனர்கள் எழுதிய வர்ண தர்மத்தின் அடிப்படையில் உருவானது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்ப ட்ட காலத்தில்தான் மனு தர்ம சாஸ்திரம் என்ற அடிப்படையான நூல் எழுதப்பட்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது பெளத்தம், ஜைனம், ஆஜீவகம் ஆகிய சிரமண மதங்களின் தோற்றத்திற்கு எதிர்வினையாக ஆரியர்கள் சமூகத்தை மறுகட்டுமானம் செய்யும் முயற்சியில் தோன்றியதாகக் கருத முடிகிறது. பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்ற நால்வர்ண படிநிலை சமூகத்தை உருவாக்கினார்கள். நல்வர்ணத்திற்கு வெளியே அவர்ணர்களான விலக்கப்பட்ட மக்கள் தொகுதிகள் உண்டு.
ஒருவர் தன் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவியில் குறிப்பிட்ட வர்ணத்தில் அல்லது அவர்ணராகப் பிறப்பார் என்பதுதான் வர்ண தர்மத்தின் சாராம்சம். ஆன்மாவிற்கு வர்ணம் கிடையாது; அதன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி ஒரு வர்ணத்தில் பிறக்கும் என்றால், திருமணங்கள் வர்ணத்திற்கு உள்ளாகவே நடக்க வேண்டும். மாறாக மேல் படிநிலை வர்ணத்தை சேர்ந்தவர், கீழ்படிநிலை வர்ணத்து பெண்ணை மணந்தால் அது அனுலோமம். கீழ்படிநிலை வர்ணத்தவர் மேல்படிநிலை பெண்ணை மணந்தால் அது பிரதிலோமம். அனுலோமத்தைவிட பிரதிலோமத்திற்குத் தண்டனை கடுமையாக இருக்கும்.
ஜாதீயப் படிநிலை சமூகம் இந்த வர்ண தர்மத்தின் அடிப்படையில் உருவானது. இடைக்காலத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் எல்லாம் கலந்துவிட்டதால் பிராமணர்கள், சூத்திரர்கள் என்ற இரண்டே வர்ணம்தான் என்று கூறிவிட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு ஜாதி அமைப்புகளும் தாங்கள் சத்திரியர்கள், வைசியர்கள் என்று அழைக்கப்பட வேண்டுமென காலனீய ஆட்சியாளர்களிடம் முறையீடு செய்தார்கள். காரணம் வர்ண தர்ம சாத்திரங்களை அடிப்படையாக க் கொண்ட தனிநபர் சட்டங்களையே காலனீய ஆட்சியாளர்கள் பின்பற்றினார்கள்.

உதாரணமாக பிப்ரவரி 5, 1941 அன்று நீதிபதிகள் பாண்டுரங்க ராவ் மற்றும் சோமைய்யா வழங்கிய தீர்ப்பினை தனது ஆரிய மாயை நூலில் அண்ணா குறிப்பிடுகிறார். ஒரு பிராமண வக்கீல் ஒரு சூத்திரப் பெண்ணை மணந்துகொண்டது தர்ம சாத்திரங்களின்படி செல்லாது என தீர்ப்பளித்தனர். அது அனுலோமத் திருமணமாக இருந்தாலும், கலியுகத்தில் அந்த திருமணங்கள் செல்லாது, சட்டப்படி அந்த மனைவியும், குழந்தையும் ஜீவனாம்சமாக அந்த பிராமண வக்கீலின் சொத்தில் பங்கைக் கேட்க முடியாது என்று தீர்ப்புக் கூறினர். இந்த வழக்கின் விவரங்களை வலைத்தளங்களில் முழுமையாக படித்தால் எந்த அளவு மனு தர்ம சாத்திரங்கள் 1941-ஆம் ஆண்டில் கூட சட்டமாகக் கோலோச்சின என்பதை புரிந்துகொள்ள முடியும். பார்க்க: Swayampakula Subbaramayya And Ors. vs Swayampakula Venkatasubbamma And Ors. on 5 February, 1941
இந்தியக் குடியரசில் அனைத்து மக்களும் சமம் என்று இந்து கோட் பில் சட்டம் உறுதி செய்யும் வரையில் தனி நபர் சட்டங்களாக இந்த வர்ண தர்ம பாகுபாடு கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பதை நாம் உணர்ந்தால்தான் ஏன் ஜாதீய மனோபாவம் இவ்வளவு பரவலாக நிலவுகிறது என்பதையும் சிந்திக்க முடியும். சட்டம் மாறினாலும் மக்கள் மன ங்களில் ஜாதீய ஏற்றத்தாழ்வு அகலவில்லை. குறிப்பாக பட்டியிலன மக்கள், தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மணப்பதை கடுமையாக எதிர்க்கும் மனோபாவம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உருவாகியுள்ளது. பலரும் பார்ப்பனீயத்தைக் கடுமையாக விமர்சித்தாலும், அது பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதி ஆதிக்கமாக உருவெடுத்திருப்பதை போதுமான அளவு உள்வாங்குவதில்லை, விமர்சிப்பதில்லை. அதனால் பல்வேறு ஜாதிகளிடையே விலக்கம் நிலவினாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தலித் சமூகங்களுக்கும் இடையிலான சமூக எல்லைக் கோடு மிகுந்த வன்முறையுடன் பல இடங்களில் பாதுகாக்கப் படுகிறது.
பெண்ணுரிமையும், தந்தையாதிக்க சமூகமும்
இருபத்தோரு வயதான ஒரு பெண் இறையாண்மையுள்ள குடிநபர். தான் எப்படி வாழ வேண்டும், யாரை மணக்க வேண்டும் என்று முடிவு செய்ய அவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஆகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்ணிற்கு திருமணம் செய்துவைப்பது தந்தையின் கடமை மற்றும் உரிமையாகப் பார்க்கப் படுகின்றது. அந்த பெண் தானாக ஒரு துணையைத் தேடிக்கொள்வது தந்தையின் அதிகாரத்திற்கான சவாலாக, இழுக்காகக் கருதப்படுகிறது. எழுபத்தைந்து ஆண்டுகளில் எத்தனையோ திரைப்படங்களும், புனைவுகளும் காதலைக் கொண்டாடினாலும், அது ஒரு கற்பனை மகிழ்ச்சியாக இருக்கும் அளவு சமூகத்தில் நடைமுறையாகவில்லை எனலாம். இதன் பொருள் காதல் திருமணங்களே, ஜாதி மறுப்புத் திருமணங்களே நடப்பதில்லை என்பதல்ல. அவை நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் எண்ணிக்கையளவில் அவை இன்னமும் குறைந்த சதவீதமாகத்தான் உள்ளன.

அதற்கு எதிர்திசையில் கணணி மூலம் இயங்கும் திருமணத்திற்கு இணை தேடும் மேட்ரிமோனி தளங்கள் ஜாதிவாரியாக இயங்குவதையும், தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதையும் காண முடியும். குறிப்பிட்ட ஜாதி சொந்தங்களை அழைத்து, உங்கள் பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ இணையைத் தேட வேண்டுமா, இந்த வளைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் என அழைக்கிறார்கள். ஜாதி அகமணமுறை என்பது பழைமையின் பெரும் கற்பாறையாக நெடுந்தோங்கி நிற்கிறது. ஜாதி சங்க கூட்டங்களில் இளம் பெண்கள், ஆண்களை நாங்கள் ஜாதிக்குள்ளேயேதான் திருமணம் செய்து கொள்வோம் என சபதம் எடுக்கச் சொல்கிறார்கள்.
ஜாதி ஒழிப்பின் இயங்கியல்
ஜாதி ஒழிப்பைப் பேசும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலர் உடனடியாக ஜாதியே இல்லை என்று அனைவரும் கூறிவிட்டு ஜாதியற்றவர்களாக மாறிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த கற்பனாவாத இலட்சியவாத நோக்கு ஜாதீய ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் உடனடியாக நடைபெற முடியுமா என்பதைச் சிந்திப்பதில்லை. ஜாதீயத்தின் விஷப்பல் என்பது ஏற்றத்தாழ்வு. அந்த விஷப்பல்லை சுயமரியாதை என்ற கிடுக்கியால் அகற்றினால்தான் ஜாதீயத்தை எதிர்கொள்ள முடியும். மேலும் ஜாதியமைப்பால் பின் தங்கிய சமூகத்தினருக்கு ஜாதியின் அடிப்படையில் நிவாரணம் அளிக்க இட ஒதுக்கீடு போன்ற நடைமுறைகள் தேவைப்படுகின்றன. இது ஜாதீய ரீதியான அணிதிரட்டலுக்கு இட்டுச் செல்கிறது. நமது சமூக வரலாற்றில் ஜாதி என்பது கலாசார, அரசியல், பொருளாதார காரணிகளைக் கொண்ட கட்டமைப்பு என்பதால் அதனை ஒரே மூச்சில் துடைத்தெறிய முடியாது. அதனால் ஜாதி சமத்துவத்தை முதலில் உருவாக்காமல் ஜாதியை ஒழிக்க முடியாது.

ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்த முற்போக்காளர்களும் தங்களுக்கு ஜாதி அடையாளம் இல்லை என்று மறுக்கும்போது, ஜாதி அடையாளத்தை பிற்போக்காளர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். தொடர்ந்து ஜாதி ஏற்றத்தாழ்வின் ஊற்றுக்கண்ணாக மாறுகிறது. ஜாதி அடையாளத்தை சமூக முன்னேற்றத்திற்கான களமாக அங்கீகரித்து, அதில் முற்போக்கு சிந்தனைகளை உருவாக்கி, ஜாதீய சமத்துவத்தை வலியுறுத்தினால்தான் ஜாதீயம் பலவீனமடையும். ஜாதி அடையாளத்திலிருந்து ஏற்றத்தாழ்வையும், அகமணமுறையையும் அகற்ற வேண்டும். பிறப்பிற்கும், ஜாதி அடையாளத்திற்கும் உள்ள தொடர்பை அறுக்க வேண்டும். அப்போதுதான் ஜாதி அடையாளம் புதிய உள்ளடக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அப்படிச் செய்யாமல் முற்போக்கு சிந்தனையை ஜாதி அடையாளத்திலிருந்து முற்றிலும் விலக்கும்போது, ஜாதி அடையாளம் பிற்போக்குக் கூடாரமாகத்தான் தொடர்ந்து விளங்கும். ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் நிகழ்த்திய உரைகளை திராவிட இயக்க சிந்தனையாளர் சுபகுணராஜன் தொகுத்துள்ளார். அந்த உரைகளில் ஜாதிகளை முற்போக்கு சிந்தனையின் களமாக பெரியார் மாற்ற விழைவதைக் காணலாம். அவர் ஜாதி சங்கங்களே கூடாது என்ற நிலைபாட்டை எடுக்கவில்லை. மாறாக ஜாதிகள் தங்கள் சமூக க் கூட்டுறவை மேம்படுத்திக் கொள்ளும்போது பிற சமூகங்களுடன் ஏற்றத்தாழ்வான உறவை வைத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறார். சுயமரியாதை என்பது ஒருவருக்கு மேலோ, கீழோ யாரும் இல்லை என்பதை அறிவதுதான் என்று வலியுறுத்துகிறார்.
ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவையா?
ஜாதீய உணர்வு, ஏற்றத்தாழ்வு நோக்கு அல்லது ஆணவம் பொதுவாக ஜாதீயச் சமூகத்தால் உருவாக்கப் பட்டாலும், அதன் முக்கியமான களமாக விளங்குவது குடும்பம்தான். பெண்ணின் காதல், ஜாதி மறுப்புத் திருமணம் அந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை அவமானப் படுத்தும், அந்தக் குடும்பம் ஜாதி சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாது என்பது போன்ற பிற்போக்கு மனோபாவம்தான் ஜாதி ஆணவக் கொலைகளை நிகழ்த்துகிறது. கொலையைச் செய்வது அந்தக் குடும்பத்து உறுப்பினராக இருக்கலாம் அல்லது கூலிப்படையாக இருக்கலாம். ஆனால் அந்த கொலைக்கு பொறுப்பு ஜாதி ஆணவத்தின் களமான குடும்பத்திற்கு இருக்கிறது.
ஜாதி ஆணவக் கொலைகளை பொதுவான குற்றவியல் சட்ட த்தின் மூலம் அணுகும்போது இந்த சமூகவியல் பரிமாணம் விடுபட்டுப் போகிறது. ஜாதி ஆணவக் கொலை பிற கொலைகள் போல அல்ல. அது சமூகக் கருத்தியலை ஒரு குடும்பம், தந்தையாதிக்க மனோபாவம் ஏற்றுக்கொள்வதால் நிகழ்கிறது. அதனால் காதலர்களில் அல்லது இணையர்களில் எந்த மேல்படிநிலை ஜாதியினரின் ஆணவத்தால் கொலை நிகழ்கிறதோ அந்த இணையரின் குடும்பத்திற்கு, குறிப்பாக பெற்றோருக்கு பொறுப்பு இருக்கிறது. அவர்களது நேரடித் தொடர்பிற்கு அப்பாற்பட்ட மறைமுக உந்துவிசைப் பொறுப்பு அது. ஆங்கிலத்தில் இதனை வைகேரியஸ் லியபிலிடி (Vicarious Liability) என்று கூறுவார்கள்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தின் வாகனத்தை ஓட்டுபவர் கவனக் குறைவாக விபத்தை ஏற்படுத்தினால் அதற்கு அந்த நிறுவனமும் பொறுப்புதான். ஓட்டுனர்தான் தவறு செய்தார் என்பதால் நாங்கள் நட்ட ஈடு தர முடியாது என்று கூற முடியாது. அவர்கள் அந்த ஓட்டுனரை பணி நீக்கம் செய்கிறார்களா, என்ன தண்டனை தருகிறார்கள் என்பது வேறு பிரச்சினை. ஆனால் விபத்திற்கு அந்த நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு விமானி தவறு செய்து விபத்து நடந்தால் அந்த விமான நிறுவனம் பொறுப்பேற்கத்தான் வேண்டும். இதுதான் vicarious liability என்பதற்கான உதாரணம். எவ்வாறு பொறுப்பேற்க வேண்டும், என்ன அபராதம் செலுத்த வேண்டும், நட்ட ஈடு தரவேண்டும் என்பது வழக்குக்கு வழக்கு மாறுபடும். ஆனால் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
அதேபோல மேல்படிநிலை ஜாதியாக ஆணவம் கொள்ளும் குடும்பம் அந்தந்த வழக்கின் தன்மையைப் பொறுத்து கொலைக்கு பொறுப்பேற்கத்தான் வேண்டும். இதன் பொருள் சில அவசரக்காரர்கள் கூறுவது போல அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என்பதல்ல. தூக்கு தண்டனை என்பதே நாகரீக சமூகத்தில் இருக்க முடியாது. ஆனால் எத்தகைய அபராதம் அல்லது சிறைதண்டனை என்பதை முடிவு செய்ய சட்டம் இடமளிக்க வேண்டும். ஜாதி ஆணவக் கொலை நிகழ்ந்தால் ஆணவச் சமூகத்து காதலரின் குடும்பம் நிச்சயம் தண்டிக்கப் படும், கடும் அபராதங்களை, சிறை தண்டனையை சந்திக்க வேண்டி வரும் என்ற நிலை ஏற்பட்டால்தான் அவர்கள் காதலர்களை கொல்லத் தயங்குவார்கள். தனிச்சட்டம் என்பது வழக்கு விசாரணையிலிருந்து, நீதிமன்ற விசாரணை, தண்டனை ஆகிய அனைத்திற்கும் தனிப்பட்ட நெறிமுறைகளை வகுக்க க் கூடியது என்பதால் இந்த தீவிரமான சமூக க் குற்றத்திற்கு தனிச்சட்டம் வகுப்பது அவசியம்தான் எனலாம்.
தனிச்சட்டம் இயற்றினால் மட்டும் குற்றம் நிகழாதா என்றும் பலர் கேட்கிறார்கள். இவர்கள் சட்டம், நீதி ஆகியவற்றின் மானுடவியல் த த்துவார்த்த அடிப்படைகளை புரிந்துகொள்வதில்லை. சட்டம் என்பது சமூகம் தன்னையே நெறிப்படுத்திகொள்வதன் வெளிப்பாடு. ஒரு தனிப்பட்ட பிரச்சினை சமூகத்தில் நிலவுகிறது என சமூகம் உணரும்போது அதற்கான தனிச்சட்ட த்தை இயற்றுவதன் மூலம் தன்னுடைய நெறிகளுக்கான விருப்புறுதியை, will to social justice – என்பதை வெளிப்படுத்துகிறது.
சட்ட த்தின் நடைமுறை அம்சங்களை சட்ட வல்லுனர்கள் குழு விவாதித்து முடிவு செய்யலாம். ஆனால் சட்ட த்தின் நோக்கம், அதன் இலக்கு, சமூகத்தில் நிலவும் ஒரு பெருந்தீங்கை கணக்கில் கொண்டு அதனைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும். டில்லியில் நிர்பயா வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியில் பாலியல் வன்முறைக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. இது சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளின் ஒரு அங்கம்தான். சட்டம் மட்டுமே தீர்வல்ல – ஆனால் அது ஒரு திசைகாட்டி. சமூக விறுப்புறுதியின் வெளிப்பாடு. An expression of will to just society.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.co