ஜனவரி 5 ஆம் தேதி நடக்க உள்ள போராட்டம் குறித்து மாலை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வரை சந்தித்தப் பின் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி அரசு அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலகத்தில் இன்று(ஜனவரி 2)சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், “முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இன்று அவரை சந்தித்தோம். புத்தாண்டு வாழ்த்துடன், அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி தெரிவித்தோம்.
ஆறு மாத கால அகவிலைப்படி நிலுவை தொகையை சேர்த்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
ஈட்டியவிடுப்பு பணமளிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதற்கு நிதி நிலைமையை கையாளும் அரசு ஊழியர்களுக்கு தற்போது நிதி நிலைமை என்ன என்பது தெரியும்.
இந்த கோரிக்கையும் பரிசீலனையில் தான் உள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார். நான்கு பிரிவுகளாக முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்.
இதனை முதல்வர் கேட்டுக்கொண்டார். வரும் 5ம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக இன்று ஆலோசித்து மாலையில் ஜாக்டோ ஜியோ அறிவிக்குமென” அவர் தெரிவித்தார்.
ஜாக்டோ-ஜியோ சார்பில், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா